ஒன்றிய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ரூ.84.66 கோடியில் ஆச்சி குழுமத்தின் பதப்படுத்தும் தொழிற்சாலை: காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

6 hours ago 4

சென்னை, செப். 20: ஒன்றிய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ரூ.84.66 கோடியில் ஆச்சி குழுமத்தின் பதப்படுத்தும் தொழிற்சாலையை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், பன்பாக்கம் கிராமத்தில் ஆச்சி மசாலா குழுமத்தின் சார்பில் ரூ.84.66 கோடி மதிப்பில் பதப்படுத்தும் புதிய தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதில் ஆச்சி உணவுக் குழுமத்தின் தலைவர் பத்மசிங் ஐசக், செயல் இயக்குனர்கள் அஸ்வின் பாண்டியன், அபிஷேக் ஆபிரகாம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் ஆச்சி குழுமத்தின் பங்களிப்பு பற்றி ஆச்சி உணவுக் குழுமத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் பேசுகையில், இந்தியா முழுவதும் மட்டுமன்றி 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு 220 வகையான தரம் நிறைந்த உணவுப் பொருட்களை தயார் செய்து 15 லட்சம் சிறு கடைகள் வழியாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் கைகளில் ஆச்சி நிறுவனம் கொண்டுபோய் சேர்க்கிறது.

உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்கவும், ஏற்றுமதியை பெருக்கவும், ஒன்றிய அரசு ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகம் செய்து 14 துறைகளை சேர்ந்த தலைசிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து இந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். அதில் முக்கியத்துவம் வாய்ந்த உணவு பதப்படுத்துதல் துறையில் ஆச்சி உணவு குழுமத்தை தேர்வு செய்தது மகிழ்ச்சியான செய்தியாகும். ஒன்றிய அரசின் அற்புதமான இந்த திட்டத்தில் ஆச்சி இடம் பெற்றது மிகச் சிறந்த பெருமையாகவும், அங்கீகாரமாகவும் உள்ளது.

இதற்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வரும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். கொரோனா காலத்தில் பல்வேறு பெரு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஒன்றிய அரசு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தி அனைவருக்கும் ஊக்கத்தை தந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆச்சி குழுமம் ரூ.84 கோடியே 66 லட்சம் முதலீடு செய்திருக்கிறது. ரூ.45 கோடி மதிப்பில் தொழிற்சாலைகளின் கட்டமைப்பினை மேம்படுத்தியும், ரூ.40 கோடி மதிப்பில் நவீன இயந்திரங்கள் பயன்பாட்டிற்காகவும் முதலீடு செய்துள்ளோம்.

புதிதாக திறக்கப்பட்ட தொழிற்சாலையில் ஆண்டுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தியை உயர்த்தியுள்ளோம். 9000 மெட்ரிக் டன் மிளகாய் அரைக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 420 பேர் கூடுதலாக வேலைவாய்ப்பினை பெறுவர். 2024ம் ஆண்டு ஆச்சி உணவுக் குழுமம் ரூ.2400 கோடி விற்பனையை பதிவு செய்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ரூ.3000 கோடி என்ற விற்பனை இலக்கை எட்டி விடுவோம். பிரதமரின் 2025ம் ஆண்டு ஐந்து ட்ரில்லியன் டாலர் இலக்கிற்கான பங்களிப்பை நாங்களும் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

The post ஒன்றிய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ரூ.84.66 கோடியில் ஆச்சி குழுமத்தின் பதப்படுத்தும் தொழிற்சாலை: காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article