தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

1 hour ago 2


தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட வருவாய் அலுவலர் மு.கண்ணணுக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்றும் பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியாகியுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் மறுப்பு தெரிவித்துள்ளார்

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை appeared first on Dinakaran.

Read Entire Article