எரிமலை சீற்றம் தணிந்தது.. பாலி தீவுக்கு மீண்டும் பறக்கத் தொடங்கிய விமானங்கள்

1 week ago 4

ஜகார்த்தா:

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் சிறியதும் பெரியதுமான சுமார் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. அவ்வப்போது இந்த எரிமலைகள் சீற்றமடைந்து வெடித்து சிதறி அப்பகுதியை புகை மண்டலமாக மாற்றிவிடும். அவ்வகையில், சுற்றுலா தீவா பாலியின் அருகே அருகே உள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை கடந்த வாரத்தில் வெடித்து சிதறியது.

இதில் 10 பேர் உடல் கருகி இறந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். எரிமலை அடிவாரத்தில் உள்ள நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். எரிமலையில் இருந்து வெளிப்பட்ட புகையானது சுமார் 9 கி.மீ. உயரம் வரை சென்று காற்றில் கலந்துள்ளது. வானம் முழுவதும் சாம்பல் மயமாக காட்சியளித்ததால் விமான பயணத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது.

இதனால் பாதுகாப்பு கருதி பாலி நகரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள விமான நிலையங்களில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்தாகின. இதனால் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வெளியேற முடியாமல் கடும் அவதியடைந்தனர்.

இதேபோல் பல சர்வதேச விமான நிறுவனங்களும், சுற்றுலாத் தீவான பாலிக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்தன. இந்தியாவில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இன்று எரிமலை சீற்றம் தணிந்து நிலைமை ஓரளவு சீரடைந்த நிலையில் பல்வேறு விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கத் தொடங்கின. குவான்டஸ், ஜெட்ஸ்டார் ஆகிய விமான நிறுவனங்கள் பாலி-ஆஸ்திரேலியா வழித்தடத்தில் சில விமானங்களை மட்டும் இயக்குகின்றன. விர்ஜின் நிறுவனம் அனைத்து விமானங்களையும் இயக்குகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்கூட் ஆகிய நிறுவனங்களும் விமானங்களை இயக்கத் தொடங்கின. பாலியில் தவிக்கும் சில பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, கருடா இந்தோனேசியா விமானங்களில் டிக்கெட் பெற்று நாடு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விமானங்கள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. 

Read Entire Article