அடிலெய்டு,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்தியாவை ஒயிட்வாஷ் ஆக்குவோம் என கம்மின்ஸ், லயன் உள்ளிட்ட வீரர்கள் சவால் விடுத்தனர். அவர்களுக்கு இந்தியா முதல் போட்டியிலேயே சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியால் தங்களுடைய அணியில் எந்த பதற்றமோ, பயமோ ஏற்படவில்லை என ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலந்து மறுத்துள்ளார். மேலும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற ஒவ்வொரு இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் தனித்தனியாக ஸ்பெஷல் திட்டங்களை ஆஸ்திரேலியா வகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "எங்களுடைய அணியில் கண்டிப்பாக எந்த பதற்றமும் இல்லை. பயமும் இல்லை. அதே சமயம் ஒவ்வொரு இந்திய வீரரின் செயல்பாடு பற்றி எங்களுடைய அணியில் பேச்சுகள் இருக்கின்றன. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் அடுத்து வரும் போட்டிகளில் முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்புகிறார்கள். ஆம் நாங்கள் ஒரு போட்டியில் தோற்றோம்.
அதனால் தற்போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டங்கள் பற்றி நாங்கள் பேசி வருகிறோம். அதை உங்களுக்கு நான் சொல்ல மாட்டேன். ஆனால் நாங்கள் நல்ல செட்டிலான திட்டங்களை வகுத்துள்ளோம். முதல் போட்டியில் சந்தித்த தோல்வியால் எங்களுடைய வீரர்கள் தங்களுடைய ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்திருக்கலாம்.
ஏனெனில் முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் நன்றாக பேட்டிங் செய்தார். ராகுல் 2-வது இன்னிங்சில் நன்றாக பேட்டிங் செய்தார். அதனால் அடுத்த வாரம் நடைபெறும் போட்டியில் எங்களுடைய திட்டங்களை சற்று மாற்றக் கூடும்" என்று கூறினார்.