எங்க லட்சியத்திற்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான்: விஜயை கடுமையாக விமர்சித்த சீமான்

2 weeks ago 6

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். விஜய் கட்சி தொடங்கியது முதல் அவருக்கு ஆதரவாகவே சீமான் பேசி வந்தார். இந்த சூழலில், கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய விஜய், திராவிடமும் தமிழ் தேசியமும் தங்களது இரு கண்கள் என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், விஜய்யை நேரடியாக சாடினார். அவர் பேசும்போது, "அது கொள்கை இல்லை. அழுகிய கூமுட்டை.  ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி வந்து மோதிவிடும். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி. நெஞ்சு டயலாக்.

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிதான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பி.ஹெச்டியே வாங்கிவிட்டோம்.

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026ஆம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

Read Entire Article