சென்னை,
ஊராட்சி செயலாளர்கள் ஒரே கிராம ஊராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிவதை தடுக்கும் பொருட்டு பணி மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ஊராட்சி செயலாளர்களை நிர்வாக காரணங்களுக்காக வட்டார அளவில் மாறுதல் செய்யும் அதிகாரத்தினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு இடையேயான பணியிட மாறுதல் செய்யும் அதிகாரத்தினை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கும், மாவட்ட மாறுதல் செய்யும் அதிகாரத்தினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநருக்கும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊராட்சி செயலாளர்கள் ஒரே கிராம ஊராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதைத் தடுக்கவும், முதுநிலை மற்றும் நிர்வாக அனுபவத்திற்கு ஏற்ப கிராம ஊராட்சிகளில் பணியமர்த்துவதற்காகவும் பணி மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வயது மற்றும் உடல்நலம் சார்ந்த அடிப்படையில் கிராம ஊராட்சிகளை ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், களஅளவில் மாறுபட்டுள்ள வெவ்வேறு ஊராட்சிகளில் பணியாற்றும் வாய்ப்பு பெறுவதால் ஊராட்சி செயலாளர்களின் திறன் மேம்பாடு அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சியில் உள்ள பணிகளுக்கு ஏற்ப தகுதியான ஊராட்சி செயலாளர்களை பணியமர்த்த முடிவதுடன், நிர்வாக நலன் மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட உள்ளது. ஊராட்சி செயலாளர்களின் தேவை மற்றும் நிர்வாக நலன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி வட்டாரத்திற்குள் பணியிட மாறுதல்களை வழங்கிட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.