ஊக்க மருந்து புகார்: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை

2 hours ago 1

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. 30 வயதான இவர் கடந்த 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். கடந்த மார்ச் மாதம் அரியானா மாநிலம் சோனிபேட்டில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்றுக்கான இந்திய அணி தேர்வு போட்டியில் பஜ்ரங் புனியா கலந்து கொண்டார். இதில் தோல்வி அடைந்த அவர் ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை கொடுக்க மறுத்து விட்டார்.

இதை தொடர்ந்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவரை இடைநீக்கம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஜ்ரங் புனியா ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியிடம் முறையிட்டார். தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை குற்றச்சாட்டுக்கான அறிவிப்பை வெளியிடும் வரை பஜ்ரங் புனியாவின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதாக பஜ்ரங் புனியாவை மீண்டும் இடைநீக்கம் செய்து, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியை சமர்ப்பிக்க மறுத்ததற்காக பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டில் பயிற்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article