உழைப்பின் வெகுமதி

1 week ago 7

எந்த சாதனையும் ஒரே நாளில் நிகழ்த்தப் படுவதில்லை,ஒவ்வொரு சாதனையின் பின்னேயும் நீண்ட கால திட்டமிடலும், சிந்தனையும்,கடுமையான உழைப்பும் இருக்கும்.பல இழப்புகளை ஏற்க நேரிட்டிருக்கும். பல தடைகளைக் கடந்து,பல சவால்களை மீறித்தான் ஒருவர் சாதனையாளர் ஆகிறார்.தாஜ்மஹால் ஒரே நாளில் கட்டப்பட்டது அல்ல என்பார்கள். ஒலிம்பிக் வெற்றி ஒரே நாளில் அடையப் படுவதில்லை.நீங்கள் விஞ்ஞானியாக இருங்கள், தொழிலதிபராக இருங்கள், எந்தத் துறையை சேர்ந்தவராகவும் இருந்து விட்டுப் போங்கள். ஆனால் உங்கள் துறையில் நீங்கள் நம்பர் ஒன் ஆவதற்கு முறைப்படுத்திய தொடர்ச்சியான உழைப்பு கட்டாயம் தேவைப்படும் ஆணும் பெண்ணும் கொள்ளுகிற பத்து நிமிட உறவு குழந்தை பிறப்பதற்கு காரணமாகலாம். ஆனால் அந்தக் குழந்தை முழு வளர்ச்சி பெற்று, வெளி வருவதற்கு அது தாயின் கருவறையில் பத்து மாதம் இருந்தாக வேண்டும். சிலை கல்லில் இல்லை, சிற்பியின் சிந்தனையில் இருக்கிறது. இசை வயலினில் இல்லை.அதை மீட்டுகிறவனின் கையில் இருக்கிறது. சில நாள் முன்பு வரை விதையாக இருந்தவை தான் இன்று மலராய் பூத்துச் சிரிக்கின்றன. எனவே சாதனை என்பது ஒரே நாளில் ஏற்படுவது அல்ல,

அதற்குப் முன்பு கடுமையான முயற்சியும் முறைப்படுத்தப்பட்ட உழைப்பும் காரணமாக அமைகிறது. இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.கலிபோர்னியா நகரத்தில் பிறந்து வளர்ந்தவர் அலிசன் ஃபெலிக்ஸ். அவரின் தந்தை பால், இளம் வயதில் ஒரு ஓட்டப்பந்தய வீரர். தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். அவரது தாய் மர்லீன் ஒரு பள்ளி ஆசிரியர். அலிசனிற்கு நீளமான கால்கள். அவருக்கு விளையாட்டு ஆர்வம் அண்ணன் வெஸ்ஸிடம் இருந்து வந்த ஒரு விஷயம். ஆனாலும் ஒன்பதாம் வகுப்புவரை ஓட்டப்பந்தயம் பக்கம் வரவில்லை அலிசன்.பள்ளியில் ஒருமுறை பயிற்சியாளர் புது வீரர்களைத் தேர்ந்தெடுக்க ஓட்டப்பந்தயம் நடத்தும் போது அதில் அலிசன் பங்குபெற்றார். மிகவேகமாக ஓடிய அலிசனைக் கண்டு பயிற்சியாளர் நம்பமுடியாமல் தூரத்தைத் தப்பாக அளந்துவிட்டதாக நினைத்து மீண்டும் ஓடச்சொன்னார். வேகம் குறையாமல் மீண்டும் அதே வேகத்தில் ஓடி பயிற்சியாளரின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அமெரிக்காவின் சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த மரியோன் ஜோன்ஸ் குழந்தை பெற்று ஓய்விலிருந்ததால் அலிசன் மீது அனைவரின் கண்களும் இருந்தது. பள்ளியில் இருக்கும் போதே புகழின் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கினர் அலிசன். ஆனால் உலக சாதனை நீண்ட நாள் நீடிக்கவில்லை. 22.11 நொடிகளில் வைத்த உலக சாதனை போட்டி முடிந்த ஒரு மணி நேரத்தில் ஊக்கமருந்து சோதனை செய்யாத காரணத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அது வெறும் அமெரிக்கா அளவிலான சாதனையாக மாறியது. இது அலிசனின் அறியாமையால் வந்த விளைவு.2004 ஜூன் மாதம் அலிசன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டார். பொதுவாக இன்ஹேலர் பயன்படுத்த அனுமதி இருந்ததால் அந்தத் தடுமாற்றத்தால் அவர் வாழ்வின் ஓட்டத்தை நிறுத்தமுடியவில்லை. 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக்ஸில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை மரியோன் ஜோன்ஸ் பெற்ற ஐந்து பதக்கங்களும் ஊக்கமருந்து பிரச்னையால் திரும்பி வாங்கப்பட்டன. மேலும் ஜோன்ஸால் 2004 ஒலிம்பிக்ஸின் ஓட்டப்பந்தயங்களில் பங்குபெற முடியவில்லை. இதனால் பல புதுமுக அமெரிக்கர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி அலிசன் 2004 ஒலிம்பிக்ஸில் 200 மீட்டரை 22.18 நொடிகளில் கடந்து, தன் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை (வெள்ளி) வென்று ஜூனியர் உலக சாதனை படைத்தார்.அடுத்த அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று நான்கு பிரிவுகளில் 100மீ ஓட்டப்பந்தயத்தில் மட்டும் தோல்வி, மற்ற மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கம் பெற்றார்.2013 சாம்பியோன்ஷிப்பில் காயம் காரணமாக 200மீ போட்டியின் பாதியில் வெளியேறியதால் அந்தத் தொடரில் எந்தப் பதக்கமும் வெல்லவில்லை. காயத்திலிருந்து மீண்டு வர அலிசனிற்கு ஒன்பது மாதங்களாகின. பின்னர் 2015 சாம்பியன்ஷிப்பில் 200மீ மற்றும் 400மீ போட்டிகள் இடையே குறுகிய கால இடைவெளி மட்டும் இருந்ததால் அலிசன் 400மீ ஓட்டப்பந்தயத்தில் மட்டும் பங்குபெற்றார். அதில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

2016இல் மீண்டும் வாழ்வின் ஓட்டத்தில் தடுமாற்றம் வந்தது. இந்த முறை அது சற்று பெரிய தடுமாற்றம். உடற் பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட விபத்தால் பல தசைகள் கிழிந்துவிட்டன. இதனால் அலிசனால் 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் 200மீ போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை. ஆனால் மற்ற போட்டிகளில் பங்குபெற்ற அலிசன் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு தங்கம் வென்றார். பின்னர் 2017 உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி, இரண்டு தங்கம் வென்று சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்றவர் என்ற உசைன் போல்ட் 14 பதக்கங்கள் பெற்ற சாதனையை முறியடித்து புதிய சாதனையாக 16 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார் அலிசன்.
19 ஆண்டுகளாய் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த கால்கள் 2018இல் சிறிய ஓய்வுக்குத் தள்ளப்பட்டன. காரணம் அந்தாண்டு அலிசன் அமெரிக்காவின் ஓட்டப்பந்தய வீரர் கென்னெத் பெர்குசனை திருமணம் செய்து குழந்தை பெற்றார். அதன் பிறகு 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஓடத்தொடங்கிய அலிசனைப் பார்த்து, தாயானப்பின் முன்புபோல் இப்போதும் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அந்தக் கேள்விக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தன் கடைசி ஒலிம்பிக்ஸில் 400மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும் வென்றார்.இந்த வெற்றியின் மூலம் அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற அமெரிக்க வீரர் என்ற பெருமையைப் அலிசன் பெற்றார்.

2022 தடகள சாம்பியன்ஷிப்பில் தன் கடைசி போட்டியில் ஓடிய அவரின் கால்களை மக்களின் கண்கள் பார்த்து கொண்டே இருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் 19 ஆண்டுக்கால ஓட்டங்கள்! பல வெற்றிகள். பல சாதனைகள்,அலிசனின் குழந்தை கேம்ரின் மட்டும் தாயின் ஓட்டத்தைப் பார்க்கவில்லை, எத்தனையோ குழந்தைகளும் அலிசனைப் பார்த்து ஓடத்தொடங்கியிருப்பார்கள். நிச்சயம் தொடங்குவார்கள்.நம்மில் பலரும் ஓட்டப்பந்தயம் என்றால் உசைன் போல்ட் மட்டும்தான் நம் நினைவுக்கு வரும், அதற்குக் காரணமாக உசைன் போல்ட்டின் சிறப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், நம்மிடையே உள்ள மற்ற வீரர்களைப் பற்றியுள்ள அறியாமையும் பெரிய காரணம்தான். உலகமே உசைன் போல்டை புகழ்ந்த காலத்திலேயேதான் உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்தவர் அலிசன் ஃபெலிக்ஸ். ஓடிய கால்கள் ஓய்ந்தாலும் ஓடிக் கடந்த தூரத்தின் புகழ் தடயங்கள் என்றும் மறையாது என்பதற்கு அலிசன் சாதனைகள் மிகச் சிறந்த உதாரணம்.எனவே முறைப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான உழைப்பு தான் இவரின் வெற்றியை வசப்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.

The post உழைப்பின் வெகுமதி appeared first on Dinakaran.

Read Entire Article