உள்ளத்தில் உள்ள குறைபாடுகளைத் தூக்கி எறியுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்!

2 hours ago 4

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஓர் ஊருக்கு வெளியே மகான் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைச் சந்தித்த இளைஞர் ஒருவர் ‘‘இத்தனை பெரிய நிலைக்கு உயர்ந்த மகானாக இருக்கிறீர்கள், உங்களுடைய குரு எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார், அவர் யார் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?’’ என்று கேட்டார்.

குரு சிரித்தபடி ‘‘என் குருவைத் தெரிந்து உனக்கு என்ன ஆகப்போகிறது?’’ என்றார். ‘‘தாங்களே இவ்வளவு சக்தி உள்ளவராக இருக்கும்போது உங்கள் குரு இன்னும் சிறந்தவராக இருப்பார் அல்லவா? அவரிடம் ஞானம் பெற்றால் என் வாழ்வு உங்களைப் போன்றே உயரும் அல்லவா?’’ என்றார் அந்த இளைஞர்.

‘‘நான் குருவைக் காட்டுகிறேன். ஆனால் நீ நம்ப மாட்டாய். நம்பினால் சொல்கிறேன்’’ என்றபடி எதிரே மரத்தடியில் படுத்திருந்த ஒரு நாயைக் காட்டி ‘‘அதோ அவரே என் குரு’’ என்றார் துறவி.இளைஞன் திகைத்து நின்றார். குரு சொன்னார் ‘‘ஞானம் தேடி நான் அலைந்தபோது இந்த நாயை ஒருநாள் கண்டேன். அது பக்கத்தில் உள்ள குளத்தில் நீரைப் பருக ஓடியது. ஆனால் நீருக்கு அருகே போனதும் குரைத்துவிட்டு திரும்பி வந்தது. பயந்தது, தயங்கியது, மீண்டும் ஓடியது. குரைத்துவிட்டு திரும்பி வந்தது. நான் கவனித்துக் கொண்டே இருந்தேன். தண்ணீரில் உள்ள தனது நிழலை கண்டே குரைக்கிறது என்று எனக்கு புரிந்தது. நாலைந்து முறை பயந்து திரும்பிய நாய் துணிந்து ஒரு முறை தண்ணீரைக் குடித்தது. நிமிர்ந்து பார்த்தது. பிறகு நிழலில் தெரிந்த நாய் தன்னை ஏதும் செய்யவில்லை என்றதும் நிம்மதியாக நீரைக் குடித்தது.

இந்தச் செயல் என்னுள் ஒரு புரிதலை ஏற்படுத்தியது. நமக்கு நாம்தான் தடை, நம்முடைய மனம் தான் நமது வெற்றிக்கு எதிரியாக இருக்கிறது. நமது முன்னேற்றத்திற்கு நாம்தான் தடையாக இருக்கிறோம். இப்படி இல்லாத ஒன்றை அதாவது, தன் நிழலை தனக்கு தடையாக கருதிய நாயைப் போல,நமது மனமும் இல்லாத ஒன்றை தடையாக நினைக்கின்றது. இந்த உண்மையை எனக்கு உணர்த்திய குருவே இந்த நாய் தானே! முடிவில் அந்த நாய் பயம், தயக்கத்தைத் தள்ளி, ஆவது ஆகட்டும் என்று துணிவோடு நீரைக் குடித்து தாகம் தீர்த்தது. இப்படி மனம் சார்ந்த தடைகளைப் புறக்கணித்து நாம் துணிச்சலுடன் காரியத்தில் குதித்து விட்டால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் எனக்குள் பிறந்தது என்றார் அந்த மகான். அதுபோல்தான் தன் உடலில் உள்ள குறைபாட்டைப் பெரிது படுத்தாமல், வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளைச்,சாதனையாக மாற்றிய ஒருவரை அறிமுகம் செய்கிறேன்.

கேலி, கிண்டல்களை உடைத்தெறிந்த பார்வையற்ற சாதனை பெண் ஹன்னா ஆலிஸ் சைமன். கேரள மாநிலத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாணவி அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.  சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நீண்ட தாமதத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் சோதனைகளை உடைத்தெறிந்து சாதனை படைத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஹன்னா ஆலிஸ்.

மைக்ரோப்தால்மியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்பார்வை இழந்து விட்டார். கண் பார்வையற்ற குழந்தையால் எந்த பயனும் இல்லை என்றார்கள் உற்றார் மற்றும் உறவினர்கள். இதனால் சிறு வயதில் பலரும் அவரைக் கிண்டல் செய்துள்ளனர். இருப்பினும் அதையெல்லாம் துச்சமென நினைத்து சாதனை படைத்துள்ளார் ஹன்னா ஆலிஸ்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இது பலருக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.இவர் பள்ளிப்படிப்பைத் தாண்டியும் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் இருக்கிறார்.மேலும் யூடியூபிலும் பலருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையிலான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு பலரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்திவருகிறார். எப்போதும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும் ஹன்னா ஆலிஸ் அத்துடன் நின்றுவிடவில்லை.

பல திறமை கொண்ட இவர் கடந்த ஜூலை 15ல் ஆறு இளம்பெண்களைப் பற்றிய ஆறு சிறுகதைத் தொகுப்பை ‘‘வெல்கம் ஹோம்” என்ற புத்தகமாக வெளியிட்டார். தன்னால் விரும்பிய அனைத்தையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை முதலில் அளித்ததே தனது பெற்றோர் தான் என்று பூரிப்புடன் சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘எனக்குப் பெரிதும் உத்வேகம் அளிப்பது எனது பெற்றோர்கள்தான். அவர்கள் என்னை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்க்காமல் சாதாரணப் பள்ளியில் சேர்த்தார்கள். மேற்படிப்பின்போது எவ்விதச் சிரமமும் நான் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள். என்னால் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று தன்னம்பிக்கை ஏற்படுத்தினார்கள்.’’ என்கிறார்.

இதனால் ஹன்னா ஆலிஸ் எந்த ஒரு பிரச்னையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை மிக்கவராகவே திகழ்ந்தார். பள்ளியில் பலரும் தன்னைக் கிண்டல் செய்தபோதும் சிறுவயது முதலே பள்ளியில் தனித்து இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டபோதும் அவர் மனம் தளரவில்லை. வாழ்க்கையில் முன்னேறினாலும் இதுபோன்ற சவால்களைச் சந்திக்க நேரிடும் என்பதைப் புரிந்து கொண்டார். அதனால் வாழ்க்கையில் எதிர்கொண்ட பெரிய சவால்களைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தன்னை வலிமைப்படுத்தி கொண்டார்.

தன்னை எப்போதும் பெற்றோர்கள் வித்தியாசமாக நடத்தவில்லை. படிப்பு விஷயத்திலும் தன்னைப் பெற்றோர்கள் வித்தியாசமாக பார்க்கவில்லை. எப்போதும் சாதாரணமாக தன் உடன் பிறந்த இருவரைப்போலத்தான் தன்னையும் நடத்தினார்கள் என்கிறார் ஹன்னா ஆலிஸ்.

அவரின் பெற்றோர்கள் எல்லாக் குழந்தைகளைப் போல் தன் குழந்தையாலும் அனைத்தும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள். ஹன்னா ஆலிஸ் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அவருடைய பெற்றோர்கள்தான். மற்ற குழந்தைகள் எப்படி ஒரு மைதானத்தில் ஓடமுடியுமோ, அதேபோலத் தன்னுடைய குழந்தையும் அவருடைய பெற்றோர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு மைதானத்தில் ஓடச் செய்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி,நம்பிக்கையை உண்டாக்கி ஊக்கப்படுத்தினார்கள். எல்லாச் சூழ்நிலையிலும் எனது பெற்றோர் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள் அதனால்தான் என்னால் ஒரு பேச்சாளராக, எழுத்தாளராக மற்றும் படிப்பிலும் சிறந்து விளங்கி சாதிக்க முடிந்தது என்கிறார் ஹன்னா ஆலிஸ் சைமன்.

இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், தோல்வியைத் தாங்கும் சக்தியைக் கற்றுத்தர வேண்டும். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றலைக் கற்றுத்தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தினால் அவர்களாலும் சாதிக்கமுடியும் என்பதே. ஹன்னா ஆலிஸ் தனது குறைபாட்டைத் தூக்கி ஏறிந்து சாதித்தவர். எதைக் குறைபாடு என்று நினைக்கின்றோமோ, அதுவல்ல குறைபாடு. உன் கடமையைச் செய்யாமல் பலனை எதிர்பார்ப்பது தான் குறைபாடு.

உனக்குப் பிடித்த விஷயத்தைப் பிறருக்குப் பிடிக்காததால் செய்யத் தயங்கினால் அதுதான் குறைபாடு. நீ வாழ்ந்து கொண்டிருப்பது உன் வாழ்க்கை, உனக்காக வாழு,பிறருக்கு உதவி செய். இந்த உலகம் உனக்காக த்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உனக்கு தேவையான ஒன்றை நீ தான் தேடி எடுத்துக்கொள்ள வேண்டும். குறைபாடுகள் உடலில் இருக்கலாம் ஆனால் அது உள்ளத்தில் ஏற்பட்டுவிடாமல் எப்போதும் உற்சாகமாக இருங்கள். உன் உள்ளத்தில் உள்ள குறைபாடுகளை தூக்கி எறி. அப்போது தான் வெற்றி வசமாகும்.

The post உள்ளத்தில் உள்ள குறைபாடுகளைத் தூக்கி எறியுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்! appeared first on Dinakaran.

Read Entire Article