உளுந்தூர்பேட்டை அருகே பட்டப்பகலில் வீட்டின் பீரோக்களை உடைத்து ₹3 லட்சம் பணம் திருட்டு மற்றொரு அறையில் இருந்த 30 பவுன் நகை தப்பியது

20 hours ago 2

 

உளுந்தூர்பேட்டை, ஜன. 8: உளுந்தூர்பேட்டை அருகே கீழப்பாளையம் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ₹3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். வீட்டின் உரிமையாளர்கள் வந்ததால் மற்றொரு அறையில் இருந்த 30 பவுன் நகைகள் தப்பியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கீழப்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் வசித்து வருபவர் பக்கிரி (65), விவசாயி. இவர் நேற்று காலை மருத்துவமனைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் இருந்த மனைவி மற்றும் மருமகள் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள வயலுக்கு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் இருவரும் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் இருந்து மர்ம நபர்கள் 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டின் 2 அறைகளில் இருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்து ₹3 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு போனதை கண்டு அதிச்சி அடைந்தனர். இவர்கள் வீட்டுக்கு வருவதை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பிச் சென்றதால் மற்றொரு அறையில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகை தப்பியது. அந்த நகைகள் அப்படியே இருந்ததால் நிம்மதி அடைந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு குறித்து எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post உளுந்தூர்பேட்டை அருகே பட்டப்பகலில் வீட்டின் பீரோக்களை உடைத்து ₹3 லட்சம் பணம் திருட்டு மற்றொரு அறையில் இருந்த 30 பவுன் நகை தப்பியது appeared first on Dinakaran.

Read Entire Article