கடந்த வார நமது விவசாயி இதழின் வாயிலாக புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட வம்பன் 7 ரகத்தைப் பற்றிய சிறப்பியல்புகள், சாகுபடி முறைகளை, உர நிர்வாகம், நீர் நிர்வாகம் போன்றவற்றை தெரிந்துகொண்டோம். அதன் தொடர்ச்சியாக இந்தப் பகுதியிலும் வம்பன் 7 ரகம் பற்றிய கூடுதல் செய்திகள் இடம்பெறுகின்றன.
இலை வழி ஊட்டம் அளித்தல்
இந்த வம்பன் 7 ரக பயிரின் 50 சதவிகிதம் பூக்கும் பருவத்தில் (அதாவது 25 வது நாளில்) 2 சதம் டி.ஏ.பி கரைசலை இலை வழி உரமாக மாலை வேளையில் கைத் தெளிப்பான் கொண்டு செடிகளின் மீது படுமாறு தெளிக்க வேண்டும். தெளித்தவுடன் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் 15 நாட்கள் கழித்து (அதாவது காய் பிடிக்கும் பருவத்தில்) மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். இதனால் காய் பிடிக்கும் திறன் அதிகரிக்கும். இந்த 2 சதம் டி.ஏ.பி கரைசல் தயாரிப்பதற்கு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி தேவை. இதனை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊற வைத்து, மறு நாள் காலையில் தெளிந்த கரைசலை சேகரித்து தெளிக்க வேண்டும். அல்லது ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டர் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது) மருந்தை ஒட்டும் திரவத்துடன் 200 லிட்டர் நீரில் கலந்து பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் செடிகள் வறட்சியைத் தாங்கி அதிக அளவில் காய்த்து 20-25 சதவிகிதம் வரையில் கூடுதல் விளைச்சலைக் கொடுக்கும்.
பயிர் பாதுகாப்பு
காய்த்துளைப்பானைக் கட்டுப் படுத்த இன்டக்ஸாகார்ப் ஏக்கருக்கு 333 மிலி மருந்து 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும். மஞ்சள் தேமல் மற்றும் இலைச்சுருள் நோய்களைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும். மேலும், இதனைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த டைமெத்தாயேட் 30 EC 200 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
காய்கள் முதிர்ச்சியுறும் தன்மை கொண்டாலும் வெடிக்காத தன்மையுடையது. 65 முதல் 70 வது நாள் 80 சதம் காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
ஒரு செடியில் சராசரியாக 45-60 காய்களும், ஒரு காயில் சராசரியாக 10-13 விதைகளும் காணப்படும். ஏக்கருக்கு 450-500 கிலோ அளவில் விளைச்சல் கிடைக்கும். எனவே, வம்பன் 7 பாசிப்பயறு இரகத்தை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் இலாபமும், வருமானமும் பெறலாம்.
தொடர்புக்கு:
ப.இராமகிருஷ்ணன்: 63804 88348.
The post உயர் விளைச்சல் தரும் பாசிப்பயறு வம்பன் 7 appeared first on Dinakaran.