பிரசல்ஸ்:
ரஷியா-உக்ரைன் போர் 2022-ம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும் ரஷியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் நீடிக்கிறது. உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் உதவி செய்கின்றன. ரஷியாவுக்கு வடகொரியா தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் ரஷிய படைகளுக்கு ஆதரவாக வட கொரிய படைகளும் சண்டையிட உள்ளன. இதற்காக 10 ஆயிரம் வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளதாக அமெரிக்கா கூறி உள்ளது.
இதுபற்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறியதாவது:-
அடுத்த சில வாரங்களுக்குள் உக்ரைனில் போர்ப் பயிற்சி மற்றும் போரில் ஈடுபடுவதற்காக வட கொரியா சுமார் 10,000 துருப்புக்களை ரஷியாவிற்கு அனுப்பியுள்ளது. அந்த வீரர்களில் சிலர் ஏற்கனவே உக்ரைனை நெருங்கி உள்ளனர்.
ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகளுக்கு எதிரான போரில் இந்த வீரர்களை பயன்படுத்த ரஷியா உத்தேசித்திருப்பதாக நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம்.
வட கொரியாவின் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டால், அவர்களும் தாக்குதல் இலக்குகளாக கருதப்படுவார்கள். ஆனால் அவர்களை போரில் பயன்படுத்துவது இந்தோ-பசிபிக் பாதுகாப்பிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எங்கள் ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஏற்கனவே பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இவ்வாறு பென்டகன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உக்ரைன் வீரர்களின் ஊடுருவலை முறியடிக்க ரஷியா போராடி வரும் குர்ஸ்க் பகுதியில் வடகொரிய படை வீரர்களில் சிலர் ஏற்கனவே ரஷியாவில் முகாமிட்டுள்ளனர் என்று நேட்டோ கூறி உள்ளது.