“கட்சியில் மாற்றம் செய்ய தலைமை எடுத்த முடிவால் கடலோர மாவட்ட மாஜி அமைச்சர் ‘கிலி’யில் இருப்பது எதிர்பார்ப்பாளர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தலைநகரில் விரைவில் முக்கிய கூட்டம் இலைக்கட்சி சார்பில் நடக்க உள்ளதாம்.. இதில், மாநிலம் முழுவதும் கட்சியில் சில மாற்றங்களை செய்ய தலைமை முடிவு செய்துள்ளதாம்.. இதனால் கடலோர மாவட்டத்தில் கட்சியில் மாற்றங்களை செய்ய, தலைமை முடிவு எடுத்துள்ளது.. இதற்கான வேலைகள் நடந்து முடிந்து விட்டதாம்.. இந்த தகவல் மாஜி அமைச்சர் மணியானவருக்கு தெரிய வந்துள்ளது. கடலோர மாவட்டத்தில் கட்சியில் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த மாஜியானவருக்கு, செக் வைக்க வாய்ப்பு உள்ளதால் அவருடைய எதிர்ப்பாளர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாஜியானவர் ‘கிலி’யில் உள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நிவாரணம் வழங்கிய வாரிசுக்கு பேனர் வைத்து, அதிருப்தி கோஷ்டியினர் அசத்திப்புட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக லாட்டரி அதிபரின் வாரிசு புதுச்சேரி அரசியல் வருகையால் ஆளுங்கட்சி கூட்டணி தரப்பு ஆட்டத்தில் இருக்கு.. ஒன்றிய கட்சியின் பிரதிநிதிகள் மட்டுமின்றி தனித்துவமான சில பிரதிநிதிகளும் அவரது பக்கம் சாய்ந்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாம்.. சமீபத்தில் வாரிசை அழைத்து பிரமாண்ட விழா நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது.. புயல் பாதிப்புக்குப் பின் ஆளும் புல்லட்சாமி அரசானது அட்டைக்கு நிவாரணமாக ₹5 ஆயிரம் வழங்கப்படும்னு அறிவிச்சிருக்கிறது ஒருபுறமிருக்க, லாட்டரி அதிபரின் வாரிசு வழங்கிய நிவாரண உதவிகளை தொகுதிகளில் அதிருப்தி அணியினரும் வழங்கி வர்றாங்களாம்.. இதை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் விதமா நகரின் முக்கிய பகுதியில் அதுவும் அரசு கட்டிடத்திலேயே தங்களோட புகைப்படங்களுடன் பிரமாண்ட பேனர் வைத்து அசத்திட்டாங்களாம் ஆளுங்கட்சி அதிருப்தி பிரதிநிதிகள்.. அதில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வாரிசுக்கு நன்றி, நன்றி, நன்றி என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாம்.. இதை அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், அரசியல் பிரபலங்களும் வேடிக்கை பார்த்தபடி நகரும் நிலையில், சமூக ஆர்வலர்களோ ஏற்கனவே தொகுதியை விற்றுவிட்ட நிலையில், இப்போ அரசு கட்டிடமும் விலைபோய் விட்டதா என்ற முணுமுணுப்புடன் செல்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொட்டுநீர் பாசனத்துல ஐந்து பேர் சிக்கியிருக்குற நிலையில் அந்த டிபார்ட்மெண்ட்டே ஆடிப்போயிருக்குதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர்பத்தூர் மாவட்டத்துல சொட்டுநீர் பாசன திட்டத்துல பல முறைகேடுகள் நடக்குறதாகவும், அதுக்கு தோட்டத்தோட கலை அதிகாரிங்க துணைபோகுறதாகவும் மாவட்ட உயர் அதிகாரிக்கு புகார்கள் போயிருக்குது.. இதுக்கு அப்புறமா, சென்னையில இருக்குற உயர் அதிகாரிங்க ஒரு குழுவை அனுப்பி என்னதான் அங்க நடக்குதுன்னு ஆய்வு செஞ்சாங்க.. அந்த ஆய்வுல அவசர அவசரமாக சம்பந்தப்பட்ட பார்மர் நிலத்துல சொட்டுநீர் பாசனத்தை அரைகுறையாகவும், விவசாய நிலங்கள்ல அமைக்கப்பட்ட சொட்டுநீர் பாசன கருவிகள் புதிதாக, நிலத்துல முழுசா புதைக்காம இருக்குறது கண்டுபிடிச்சிருக்காங்க.. அதுக்கு மிஸ்டர் பத்தூர் மாவட்ட அதிகாரிகள் கொடுத்த விளக்கம் திருப்திகரமாக இல்லையாம்.. முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வந்ததால, உள்ளூர் அதிகாரிகள் 5 பேரை சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க.. இந்த சஸ்பெண்ட் விவகாரத்துல ஒட்டுமொத்த டிபார்ட்மெண்டும் ஆடிப்போயிருக்குதாம்.. மிஸ்டர் பத்தூர் மட்டுமில்லாம, வெயிலூர், குயின்பேட்டை, கிரிவலம் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் எல்லாரும் பயத்துல இருக்காங்களாம்.. சுற்றுப்புற மாவட்டங்கள்லயும் ஆய்வு நடந்தா, இன்னும் பலவிஷயங்கள் வெளியவரும்னு விஷயம் தெரிஞ்ச அதிகாரிங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவருக்கு டெல்லி குண்டு ஒண்ணு வச்சிருக்கதா உரிமை மீட்பு குழு கூட்டத்தில் காரசாரமா பேச்சு ஓடிருக்கே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் இருந்து சுத்தமா துடைத்தெறியப்பட்ட தேனிக்காரர், உரிமை மீட்பு குழு ஒன்றை ஏற்படுத்தியிருக்காரு.. இந்த மீட்புக்குழுவின் கூட்டம் சென்னையில சமீபத்துல நடந்துச்சு.. கூடிக்கலையும் கூட்டமாக இருக்குமுன்னு முன்னணி நிர்வாகிகள் கூட்டத்துக்கு வராம டாட்டா காட்டிடுவாங்களாம்.. ஆனால் இந்த கூட்டத்துல நிற்ககூட இடமில்லாத அளவுக்கு தானா சேர்ந்த கூட்டமா மாறியிருந்ததாம்.. இதுல வைத்தியமானவரு பேச்சுல கொஞ்சம் காரம் அதிகமாக இருந்துச்சாம்.. ‘74ல் அதிமுக உறுப்பினருன்னு கூறும் இலைக்கட்சி தலைவரு உறுப்பினர் அடையாள அட்டையை காட்டினால் அரசியலிருந்து வெளியே போயிடுவேன்’னு சவால் விட்டாராம்.. ‘வரும் பிப்ரவரி மாதம் உடைந்துபோன இலைக்கட்சி ஒன்றாக இணையபோகுது.. இதற்கு ஒத்துப்போகவில்லை என்றால் ஆதரவற்றவராக இலைக்கட்சி தலைவர் ரோட்டோரம் நிற்பார்’ எனவும் சொன்னதோடு மட்டுமல்லாமல் ‘கட்சியின் வரலாறு தெரியாத கூமுட்டை’ என உக்கிரமா பேசினாராம்.. ‘நீதி தேவதை கண் திறக்கப் போகிறாள்.. பொதுச்செயலாளர் ஆனது செல்லாது என தீர்ப்பு வரப்போகிறது. கட்சிக்காக கஷ்டப்பட்ட அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்குதுன்’னும் சொன்னாராம்.. திக்கு தெரியாத காட்டில் தவிக்கும் மீட்புக் குழுவினருக்கு அவரது பேச்சு ரொம்பவே ஆறுதலா இருந்துச்சாம்.. சிலரோ வழக்கமான கீதம்தான் எனவும் முணுமுணுத்தாங்களாம்.. அதோடு மட்டுமல்லாமல் இலைக்கட்சி தலைவருக்கு டெல்லி குண்டு ஒண்ணு வைச்சிருக்காம்.. இவரோட ஆட்டத்தை அடக்க வேண்டுமானால் இலைக்கட்சியை முடக்கினால்தான் முடியுமுன்னு நினைக்கிறாங்களாம்.. அதற்கான வேலையை சத்தமில்லாமல் தொடங்கிட்டதாகவும் மீட்புக்குழுவுல கிசுகிசுக்கப்பட்டதாம்’’ என்றார் விக்கியானந்தா.
The post இலை தலைவருக்கு டெல்லி குண்டு ஒண்ணு வச்சிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.