டர்பன்,
இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக எய்டன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஜோர்ஜி ஆகியோர் களம் இறங்கினர். இதில் டோனி டி ஜோர்ஜி 4 ரன்னிலும், எய்டன் மார்க்ரம் 9 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் தெம்பா பவுமா ஜோடி சேர்ந்தனர்.
இதில் ஸ்டப்ஸ் 16 ரன்னிலும், அடுத்து வந்த டேவிட் பெடிங்காம் 4 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து பவுமா உடன் கைல் வெர்ரையன் ஜோடி சேர்ந்தார். தென் ஆப்பிரிக்கா அணி 20.4 ஓவரகளில் 80 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. மழை நின்ற பின் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை நிற்காததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 20.4 ஓவரகளில் 80 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் தெம்பா பவுமா 28 ரன்னுடனும், கைல் வெர்ரையன் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.