இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு..? பிரதான தமிழ் கட்சியில் உட்கட்சி பூசல்

1 week ago 10

கொழும்பு:

இலங்கையில் வரும் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி. தலைவர் அருரா குமார திசநாயக ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் விஷயத்தில் பிரதான தமிழ்க் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

அதாவது, எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 1-ம் தேதி முடிவு செய்தது. அந்த கூட்டணியின் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், இந்த விஷயத்தில் அப்படியொரு முடிவு எடுக்கவில்லை என்றும், தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளர் பி.அரியநேத்திரனை ஆதரிக்கப்போவதாகவும் கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் கூறினார். கட்சி மத்திய குழு கூட்டம் நடைபெற்றபோது அவர் பிரிட்டனில் இருந்தார்.

இதுபற்றி கட்சியின் மற்றொரு தலைவரான மாவை சேனாதிராஜா, செய்தியாளர்களிடம் கூறுகையில், வவுனியாவில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 10 பேர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றதாகவும், அப்போது தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதை 15-ம் தேதி வரை ஒத்திவைத்ததாகவும் கூறினார்.

பிரேமதாசாவை ஆதரிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முடிவு இறுதியானது, அது பரிசீலனையில் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார்.

இவ்வாறு தலைவர்கள் எதிரும் புதிருமான கருத்துக்களை கூறி வருவதால், உட்கட்சி பிரச்சினை ஆழமாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முந்தைய அதிபர் தேர்தல்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பானது பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர்களையே ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் 22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். முன்னணி வேட்பாளர்கள் வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுவதற்கு இந்த வாக்குகள் முக்கியமானதாக இருக்கும்.

Read Entire Article