விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 54). போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். தற்போது ராஜபாளையத்தில், மலையடிப்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். மோகன்ராஜூவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவில் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசிடம் மதுபோதையில் தகாத முறையில் நடந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக மோகன்ராஜூ மீது புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கும் தகவல் வந்தது.
உடனடியாக அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன், மோகன்ராஜை ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்தார். தீவிர விசாரணைக்கு பின்னர் மோகன்ராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது மேல்நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.