இன்னும் மவுனம் ஏன்?

4 hours ago 1

சூரிய சக்தி மின்சாரத்தை விற்பனை செய்ய இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகாரில் தொழிலதிபர் கவுதம் அதானி உள்பட 8 பேருக்கு நியூயார்க் கோர்ட் பிடிவாரன்ட பிறப்பித்துள்ளது. இவ்விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் அதிர்வலைகள் பங்கு சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு மற்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கி உள்ளன.

நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், இவ்விவகாரம் மோடி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதானி குழுமத்தை பொருத்தவரை இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதியது இல்லை. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதானி குழுமத்தின் மீது பல புகார்கள் உள்ளது. நிலக்கரி சுரங்கம், மின் உற்பத்தி, சரக்கு முனையங்கள், காற்றாலை மின் உற்பத்தி, பங்கு சந்தை மோசடி என அதானி குழுமத்தின் மீதான புகார்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனாலும் மோடி அரசின் நேரடி ஆதரவு இருப்பதால் அதானி குழுமம் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை.

மோடியையும், அதானியையும் பிரித்து பார்க்க முடியாது என்றும், இந்தியாவை அதானியிடம் மோடி அடகு வைத்துவிட்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில், தற்போது நியூயார்க் கோர்ட் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. அதானியோடு இவ்விவகாரம் முடிந்துவிடவில்லை. இதில் ஒன்றிய அரசின் அதிகாரிகளும் சிக்கி உள்ளனர். அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதானி குழுமத்துடன் போடப்பட்டிருந்த 2 உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களை கென்யா உடனடியாக ரத்து செய்துவிட்டது.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கையும், வங்கதேசமும் அதானி குழுமத்துடன் போட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்வது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அறிவித்துள்ளது. இப்படி உலக நாடுகள் எல்லாம் அதானிக்கு எதிரான மனநிலையில் இருந்தாலும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசானது வழக்கம்போல அதானிக்கு ஆதரவுக்கரங்களை நீட்டி வருகிறது. அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ராகுல்காந்தி போர்க்கொடி தூக்கி உள்ளார்.

மோடி அரசாங்கம் பாதுகாப்பதால் இந்தியாவில் அதானி கைது செய்யப்படமாட்டார் என்றும், குறைந்தபட்சம் விசாரிக்கப்படக்கூட மாட்டார் என்பதை என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும் என்று ராகுல்காந்தி காட்டமாக குற்றம் சாட்டி உள்ளார். இதேபோல நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் தலைவர் கார்கே, சிபிஐ விசாரணை வேண்டும் என்று மார்க்சிஸ்ட் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய ஒன்றிய அரசு மவுனம் காத்து வருகின்றது.

ஒன்றிய அரசின் இந்த மவுனமானது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறுவதுபோல அதானியை மோடி அரசாங்கம் பாதுகாக்கிறது என்பதை நிருபிக்கும் வகையில் உள்ளது. இந்த சூழலில்தான் நாளை மறுநாள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம் நிச்சயம் அனல் பறக்கும். எந்த சூழலிலும் மோடி அரசு அதானியை விட்டுக்கொடுக்க முன்வராது. அதே வேளையில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை மோடி அரசு எப்படி கையாளப்போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post இன்னும் மவுனம் ஏன்? appeared first on Dinakaran.

Read Entire Article