சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இன்று (29.12.2024), இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெய்வ திருவுருவ படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான நாட்காட்டியை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட்டார். இந்த நிகழ்வில் ஆணையர் ஶ்ரீதர், கூடுதல் மற்றும் இணை ஆணையர்கள் உடனிருந்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
திருக்கோவிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தை எவ்வளவு பேர் எதிர்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மூன்றரை ஆண்டில், இத்திட்டம் மூலம் திருக்கோவில்களுக்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியவர்கள் கூட, தற்போது பாராட்டி வருகின்றனர்.
அறங்காவலர்கள் நியமனத்தில் பல நிபந்தனைகள் உள்ளன. சட்டத் திருத்தத்திற்கு உட்பட்டு பணியாளர்களை நியமிக்க அரசு பணியாற்றுகிறது 20 ஆயிரம் கோவிலுக்கு அறங்காவலர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அறநிலையத்துறை சட்ட விதிகளில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.