மும்பை,
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரில் நியூசிலாந்து பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 147 ரன் இலக்கை கூட விரட்டி பிடிக்க முடியாமல் இந்திய அணி தோல்வி கண்டது. இதனால் நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இதனால் எளிதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டிகளில் (5 போட்டி கொண்ட தொடர்) கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இப்படி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் இதுதான் கிரிக்கெட்டின் அழகு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இங்கிருந்து சுய பரிசோதனை செய்ய வேண்டியுள்ள இந்திய அணிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய சவால் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு- "கிரிக்கெட் உண்மையிலேயே ஒரு தாழ்மையான விளையாட்டு இல்லையா? டி20 உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களுக்கு பின் நாம் ஒரு வரலாற்று ஒயிட்வாஷ் தோல்வியை எதிர்கொள்கிறோம். அதுதான் இந்த விளையாட்டின் அழகு. அடுத்ததாக ஆஸ்திரேலிய தொடரில் பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன. இது சுய பரிசோதனை செய்து கற்றுக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கான வழி. சிறப்பாக விளையாடி வரலாற்று வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.