மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 4-வது போட்டி வரும் 26-ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வெல்லும் முனைப்புடன் இந்தியா போராட உள்ளது. மறுபுறம் இந்த போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலிய மல்லுக்கட்ட உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் மெல்போர்னில் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது தங்களை விட இந்திய அணிக்கு அதிக ரசிகர்கள் ஆதரவு தெரிவித்ததாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா வியப்புடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "மெல்போர்னில் விளையாடும்போது அது இந்திய அணியின் சொந்த மைதானம் போன்ற உணர்வு வருவது வேடிக்கையான விஷயமாகும். கடைசியாக இங்கே அவர்களுக்கு எதிராக நான் விளையாடினேன். அங்கே இந்தியாவுக்கு ஆதரவாக நிறைய மக்கள் இருந்தார்கள்.
அப்போட்டியில் ஒருமுறை மைதானத்தில் இருந்த அறிவிப்பாளர் ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவு கொடுக்குமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தார். ஆனால் அங்கிருந்த ரசிகர்கள் குறைந்த சத்தத்தையே கொடுத்தனர். பின்னர் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அப்போது வந்த சத்தம் நம்ப முடியாததாக இருந்தது.
அதைக் கேட்ட நான் நாம் டெல்லியில் இருக்கிறோமா அல்லது மெல்போர்னில் இருக்கிறோமா? என்று ஆச்சரியப்பட்டேன். அந்தளவுக்கு இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் ஆதரவு இருக்கிறது. அது சொந்த மண்ணில் விளையாடும் எங்கள் அணிக்கு வித்தியாசமான உணர்வையும் கொடுக்கிறது" என்று கூறினார்.