ஆர்ஜி கர் மருத்துவமனை நிதி முறைகேடு விவகாரம் திரிணாமுல் எம்எல்ஏ வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

1 day ago 4

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த மாதம் 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை முதல்வராக சந்தீப் போஷ் பதவி வகித்த காலத்தில் பல்வேறு வழிகளில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் சந்தீப் கோஷை ஏற்கனவே சிபிஐ கைது செய்துள்ளது. அவருடன் மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

ஆர்ஜி கர் மருத்துவமனை நிதி முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, கடந்த 6ம் தேதி சந்தீப் கோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுதிப்தோ ராயின் இடங்களில் அமலாக்கத்துறை நேற்றுமுன்தினம் அதிரடி சோதனை நடத்தியது. தொடர்ந்து 20 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையின்போது வழக்குடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* காவல்துறை மீது சிபிஐ குற்றச்சாட்டு
இதனிடையே பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார, கொலை வழக்கில் போலீஸ் தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவரையும் சிபிஐ கைது செய்துள்ளது. இந்நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை நடந்த இடத்தில் இருந்து சஞ்சய் ராயின் உடைகள் மற்றும் உடைமைகளை கைப்பற்றுவதில் காவல்துறை தாமதம் செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது, “இந்த வழக்கில் சஞ்சய் ராயின் பங்கு ஏற்கனவே வௌியாகி உள்ளது. ஆனால் சம்பவ இடத்தில் இருந்து சஞ்சய் ராயின் உடைகளை கைப்பற்றுவதில் காவல்துறையினர் வேண்டுமென்றே 2 நாள்கள் தாமதப்படுத்தி உள்ளனர். உடனே கைப்பற்றப்பட்டிருந்தால் சஞ்சய் ராய்க்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்திருக்கும்” என தெரிவித்துள்ளனர்.

* போராட்டம் தொடரும் – கொல்கத்தா மருத்துவர்கள்
நீதி கேட்டு போராடி வரும் மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதுகுறித்து மேற்குவங்க தலைமை செயலாளர் மனோஜ் பந்துவுக்கு மருத்துவர்கள் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், “அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு, தலைமை செயலாளர் தலைமையில் உறுதியளிக்கப்பட்ட பணிக்குழு உருவாக்கம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்” என தெரிவித்துள்ளனர்.

The post ஆர்ஜி கர் மருத்துவமனை நிதி முறைகேடு விவகாரம் திரிணாமுல் எம்எல்ஏ வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article