ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளது: காவல்துறை புதிய தகவல்

1 month ago 3

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் போலீசார் பரபரப்பு தகவல்களை தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, ஐகோர்ட் வளாகத்திற்குள் வைத்து கைமாற்றப்பட்டதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. இதனை கேட்ட நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? என கேள்வி எழுப்பினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரௌடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், சம்பவம் செந்தில் உள்ளிட்டோர் மீது போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக கூறினார். இந்த விவகாரத்தில் பல்வேறு சதிச் செயல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளையும் அந்த வழக்குகளுடன் சேர்த்து தள்ளிவைக்க வேண்டும் எனவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த மனு ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும் இதே காரணத்தை கூறி விசாரணையை தாமதப்படுத்துவதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து, அனைத்து மனுக்கள் மீதும் பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த காவல்துறைக்கு அறிவுறுத்தினர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளது: காவல்துறை புதிய தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article