புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் அமைந்த இந்திய தூதரகத்தில் ஏற்பட்ட சம்பவத்தில், உள்ளூர் பணியாளர் ஒருவர் லேசான காயம் அடைந்துள்ளார். இதனை மத்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரம் இன்று தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்த சம்பவம் பற்றிய அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்து உள்ளது. ஜலாலாபாத் நகரில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் 2020-ம் ஆண்டு இந்தியாவால் மூடப்பட்டது.
அந்நாட்டின் நிலைமை மோசமடைந்து காணப்படும் சூழலில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிடும் வகையில் 50 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கோதுமை, 250 டன்கள் மருத்துவ உதவி மற்றும் 28 டன்கள் அளவிலான நிலநடுக்க நிவாரண உதவி ஆகியவற்றை இதுவரை இந்தியா அளித்துள்ளது.