சென்னை,
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இதனிடையே சென்னையில் நேற்றிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மேம்பாலங்களில் கார்களை பார்க்கிங் செய்ய தொடங்கி உள்ளனர். இதன்படி சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் ஏராளமான கார்களை அதன் உரிமையாளர்கள் நிறுத்தி வருகின்றனர். அதேபோல், ராயபுரம் மேம்பாலமும் கார் பார்க்கிங்காக மாறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக சென்னையில் கடந்த ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கார் உரிமையாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய கார்கள் பழுதாகி, பல லட்சம் ரூபாய் செலவழிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சமீப காலமாக, அதி கனமழை என்ற அறிவிப்பு வந்த உடனே மக்கள் அலர்ட்டாகி விடுகின்றனர். நாளையும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டநிலையில், மழையில் கார்களை மூழ்குவதை தவிர்க்க உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.