சென்னை,
`உறுமீன்', `பயணிகள் கவனிக்கவும்' போன்ற திரைப்படங்களின் இயக்குனரான எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் `அலங்கு'. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக குணாநிதி நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணிக்கு ஆதரவாக மகள் சங்கமித்ரா பிரசாரங்களை மேற்கொண்டது பலருக்கும் நினைவிருக்கலாம். சங்கமித்ரா திரைப்பட தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார். புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் 'அலங்கு' திரைப்படமானது, தமிழக - கேரள எல்லைப்பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் - திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.
கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையாக வடிவமைத்துள்ளனராம்.
அலங்கு, என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தைச் சார்ந்ததாம். ராஜராஜ சோழனின் படையில் போர் நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் நினைவூட்டலுக்கும் இந்தப் பெயர் மிகவும் பொருந்தியிருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகின்ற 27ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். இது குறித்த பதிவை இயக்குனர் எஸ்.பி. சக்திவேல் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.