அரசு மூலம் நடைபெறும் நலத்திட்டங்கள் மக்களிடம் விரைந்து சேர நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

6 hours ago 2

சென்னை: தமிழக அரசு மூலம் நடைபெறும் நலத்திட்டங்கள் மக்களிடம் விரைந்து சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பெரியசாமி உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:

கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்புகள் புதுப்பிக்கும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டு திட்டங்கள் மூலம் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இணைய வழி சேவைகளான தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்குகள் திட்டம், இணைய வழி வரி வசூல் சேவை மற்றும் இணைய வழி கட்டிட வரைபட அனுமதி சேவை ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அதனை மேம்படுத்திட வேண்டும். தமிழக அரசு மூலம் நடைபெறும் நலத்திட்டங்கள் மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களிடத்தில் விரைந்து சேர்த்திட வேண்டும்.

விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் பின் தங்கிய கிராம பகுதிகளில் அரசு நலத்திட்டங்களை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுப்பதுடன், அவ்வப்போது பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலனை செய்து மக்களின் அடிப்படை தேவைகளை தாமதம் இன்றி நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் பொன்னையா, கூடுதல் இயக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு மூலம் நடைபெறும் நலத்திட்டங்கள் மக்களிடம் விரைந்து சேர நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article