அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

1 week ago 4

சென்னை,

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு டாக்டர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் டாக்டரை தாக்கிய விக்னேசுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்போராட்டம் நடைபெறுகிறது.

டாக்டர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை வழியாக அளித்த வாக்குறுதிகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில் தான் நலமாக இருப்பதாக கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் பாலாஜி தெரிவித்திருந்தார். முன்னதாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளான டாக்டர் பாலாஜியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'டாக்டர் பாலாஜி நலமுடன் உள்ளார். இன்று காலை டாக்டர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்'. டாக்டர் பாலாஜி எழுந்து அமர்ந்து நன்றாக பேசினார். இன்று மதியத்திற்கு பின் டாக்டர் பாலாஜி ஐ.சி.யூ.வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்படுவார். டாக்டர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமை செயலாளர் தலைமையில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு மருத்துவமனைகளில் பணியில் உள்ள டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நோயாளியுடன் வருவோருக்கு டேக் பயன்பாடு சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது. 36 மருத்துவகல்லூரி, 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் படிப்படியாக டேக் அறிமுகம் செய்யப்படும்.

பொது மருத்துவப்பிரிவுக்கு வருவோருக்கு நீலநிற டேக் பொருத்தப்படும். சிவப்பு நிறம் தீவிர சிகிச்சை பிரிவு, மஞ்சள் நிறம் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, பச்சை நிறம் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு என் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்துவது, மின்விளக்குகளை உறுதி செய்வது, ஒப்பந்த பணியாளர்களின் வருகை பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்வது போன்றவற்றை நடைமுறை செய்வது படி படியாக கொண்டு வரப்படும். நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு டேக் கட்டுவது அமல்படுத்தப்படும்" என்று அவர் கூறினார். 

Read Entire Article