அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

2 days ago 3

திருச்சி: அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அகில இந்திய 13வது பகுத்தறிவாளர் கழக மாநாடு திருச்சியில் நேற்றுமுன்தினம் துவங்கியது. 2வது நாளாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பகுத்தறிவாளர்கள் பங்கேற்றனர். இது பெரியாருக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். வைக்கம் நூற்றாண்டு விழா கேரளத்தில் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் பங்கேற்றனர்.

வைக்கம் வெற்றி விழா நினைவாக வைக்கத்திலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்து இயக்க வேண்டும் என வீரமணி கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் சென்னையிலிருந்து வைக்கத்திற்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வைக்கம் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த பேருந்து உதவிகரமாக இருக்கும். கடந்த பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி இதற்கு தீர்வு காணப்பட்டது. தமிழக அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி முதற்கட்டமாக சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article