அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

1 month ago 5

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியாளர்களாக பணியாற்றி வரும் 30 ஆயிரம் பேருக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மிக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தைக் கூட ஓராண்டாக வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.1,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. நடுநிலைப் பள்ளிகளில் ரூ.1,500, உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.2,250, மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.3,000 என்ற அளவில்தான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை வைத்துக் கொண்டு ஒருவரால் கண்ணியமாக வாழ முடியாது. ஆனால், இந்தத் தொகையையே ஓராண்டாக வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது என்றால், சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் தூய்மை ப்பணியாளர்களின் நலனில் அது எந்த அளவுக்கு அக்கறையின்றி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிகளின் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊரகவளர்ச்சித் துறை வாயிலாகவே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அவர்களின் ஊதியத்திற்கான நிதியை அத்துறை நிறுத்தி விட்டதால்தான் ஊதியம் வழங்க முடியவில்லை என்று அத்துறையின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள்தான் சமூகத்தில் மிகவும் அடிமட்ட நிலையில் இருப்பவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கான ஊதியத்தை இறுதி செய்து விட்டுதான் மற்ற செலவுகளை அரசு செய்ய வேண்டும். ஆனால், யாருக்கும் பயனற்ற நிகழ்வுகளுக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயமாகும். எதற்கெடுத்தாலும் சமூக நீதி அரசு, சமூக நீதி அரசு என்று கூறிக் கொள்ளும் தி.மு.க. அரசு, இதுதான் சமூகநீதியின் அடையாளமா? என்பதை விளக்க வேண்டும்.

ஒருபுறம் மாதம் ரூ.12,500 மட்டுமே ஊதியமாகப் பெறும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு கோரி போராடுகின்றனர், இன்னொருபுறம் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் மறுக்கப்படுகிறது. ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ, இவை குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்த முனைகின்றனர். மக்களின் துயரம் கோபமாக மாறும்போது, அந்த கோப வெள்ளத்தில் அனைத்து அநீதிகளும் அடித்துச் செல்லப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article