விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நிலுவைக்கான காரணம் குறித்து தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தும், மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்கான காரணம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு வரும் மனுக்கள் மீது உரிய கவனத்துடனும், விரைந்தும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை காகிதங்களாக பார்க்காமல், கோரிக்கைகளில் உள்ள மக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம் கிராம ஊராட்சிகள் அதிகம் உள்ள மாவட்டமாகும். இங்கு விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்பவர்கள்தான் அதிகம் உள்ளனர். இந்த மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை, பணிகளை செய்து தருவதை அரசு அலுவலர்கள் தங்களது முக்கிய கடமையாக மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் முன்னேற முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து விழிப்புணர்வு எற்படுத்தி குழந்தை திருமணங்கள் ஒன்றுகூட நடைபெறாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை மாற்ற வேண்டும். அனைத்து திட்டங்களின் மூலம் தகுதியுள்ள அனைவரும் பயன்பெற அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் திராவிட மாடல் அரசு விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய அரசு அலுவலர்களாகிய நீங்கள்தான் அரசிற்கும், பொதுமக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.