அமைதியாக முடிந்தது தேர்தல்; இலங்கையின் புதிய அதிபர் யார்? அதிகாலையில் முடிவுகள் அறிவிப்பு

2 hours ago 3

கொழும்பு: அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் எந்த வன்முறையும் இன்றி நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்ததும், உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இதன் முடிவுகள் இன்று அதிகாலையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டார். அதன் பின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிகிறது. இந்நிலையில், இலங்கையின் 10வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

இதில் சுயேச்சை வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திசநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செகா, தமிழர்களின் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 1.7 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புத்த மடாலயங்கள், பள்ளிகள், சமூக நிலையங்கள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் மந்தமான வாக்குப்பதிவு இருந்தாலும் பிறகு மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 4 மணி வரையிலும் வந்த மக்கள் கூடுதல் நேரத்துடன் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தேர்தலில் எந்த இடத்திலும் வன்முறை சம்பவங்கள் நடக்கவில்லை. முற்றிலும் அமைதியாக தேர்தல் நடந்ததாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நுவாரா எலியா, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் 80 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின. தலைநகர் கொழும்புவில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. சராசரியாக நாடு முழுவதும் 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்தது. மாலை 4 மணிக்குப் பிறகு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, வழக்கமான வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன. நேற்று நள்ளிரவு வரை வாக்கு எண்ணும் பணி நீடித்தது. இதனால் நள்ளிரவிலோ அல்லது இன்று அதிகாலையிலோ முடிவு வெளியாகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். கருத்துக்கணிப்புகளில் மார்க்சிஸ்ட் தலைவர் திசாநாயகே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post அமைதியாக முடிந்தது தேர்தல்; இலங்கையின் புதிய அதிபர் யார்? அதிகாலையில் முடிவுகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article