சென்னை,
பா.ம.க.வின் பொதுக் குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது புதுச்சேரி இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை நியமிப்பதாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட அன்புமணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து அன்புமணி பேசுகையில், கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள்கூட ஆகாத ஒருவர் எப்படி இளைஞரணி தலைவராக முடியும்? கட்சியில் உழைக்கக்கூடியவர்கள் பலரும் உள்ளனர் என்று தெரிவித்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ராமதாஸ் கட்சியை உருவாக்கியது நான், கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை நான் தான் நியமிப்பேன். இதில் உடன்படாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று தெரிவித்தார்.
இதில், ஆத்திரம் அடைந்த அன்புமணி, எனக்கு சென்னை பனையூரில் அலுவலகம் உள்ளது. என்னை சந்திக்க விரும்புபவர்கள் யாராக இருந்தாலும், அங்கு வந்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறி செல்போன் எண்ணையும் அறிவித்துவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே பொதுக்குழு கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், ராமதாஸ் உடன் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் முக்கிய நிர்வாகிகள் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர்அருள்மொழி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அன்புமணியை சமாதானம் செய்ய குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை அன்புமணியை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.