அண்ணா பல்கலை. வழக்கு; சிபிஐ விசாரிக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

16 hours ago 2

சென்னை.

சென்னை தி நகரில் தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. அதாவது இன்று பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக்,மாநில தலைவர் அண்ணாமை, மத்திய இணை மந்திரி எல் முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மேலிட இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்களான எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது அடக்குமுறையை அரசு கையாள்கிறது. போராடுவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் அனுமதி உள்ளது. அவற்றை புறந்தள்ளி கைது செய்து அடக்குமுறையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அண்ணா பல்கலை. விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். பெண்கள் தமிழக அரசின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். அண்ணா பல்கலை. விவகார விசாரணையில் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.பெண்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளது. எதிர்க்கட்சிகளின் குரல்வளை ஏன் நசுக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட குரல் எழுப்புவதற்கு அனுமதி மறுக்கிறீர்கள். இங்கு என்ன ஜனநாயகம் இருக்கிறது. அவசர நிலை போல் அனைவரின் குரல்வளை நெரிக்கப்படுவது ஏன்? என்றார்.

முன்னதாக கட்சி அலுவலகத்தில் பாஜக நிர்வாகி ஒருவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. அவர் பாஜக அலுவலகத்தின் தரையில் விழுந்து துடிதுடித்தார். இதை பார்த்ததும் தமிழிசை சவுந்தரராஜன் ஓடிவந்து அந்த பாஜக நிர்வாகிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். அவரை ஆசுவாசப்படுத்தும் வகையில் உடலில் ஆங்காங்கே தேய்த்து விட்டார். இதில் பாஜக நிர்வாகி மெல்ல மீண்டு வந்தார். அதன்பிறகு அந்த நிர்வாகி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் அந்த நிர்வாகிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழிசை சவுந்தரராஜனின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article