சென்னை,
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த பெஞ்சல் புயல், நள்ளிரவில் புதுவைக்கு அருகே கரையை கடந்தது. அப்போது புதுவை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் கரையை கடந்தாலும், கடந்த 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், நாகை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கரூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பத்தூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.