அடிலெய்டு டெஸ்ட்: தொடக்க ஜோடியை மாற்ற விரும்பவில்லை - கேப்டன் ரோகித் சர்மா

1 month ago 6

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை அடிலெய்டு மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

முன்னதாக முதல் போட்டியிலிருந்து விலகிய ரோகித் சர்மாவுக்கு பதிலாக பும்ரா கேப்டனாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். தற்போது ரோகித் சர்மா 2-வது போட்டிக்கு திரும்பியுள்ளதால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி காணப்படுகிறது.

ஏனெனில் முதல் போட்டியில் அவருக்கு பதிலாக ஓப்பனராக களமிறங்கிய கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினார். மேலும் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் முதல் போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தொடக்க ஜோடியை பிரிக்க விரும்பவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். எனவே தாம் மிடில் ஆர்டரில் விளையாடப் போவதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து 2-வது போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு:- "கேஎல் ராகுல் இன்னிங்சை தொடங்குவார். நான் மிடில் ஆர்டரில் களமிறங்குவேன். நாங்கள் வெற்றிகரமான முடிவுகளை பெற விரும்புவதால் பேட்டிங்கில் நான் கீழே களமிறங்கும் தெளிவான முடிவுடன் வந்துள்ளேன். முதல் போட்டியில் அவர்கள் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்தார்கள்.

அப்போட்டியில் கேஎல் ராகுல் பேட்டிங் செய்ததை வீட்டிலிருந்து பார்த்தேன். அப்போது நம்முடைய ஓப்பனிங் ஜோடியை மாற்ற வேண்டியதில்லை என்பதை உணர்ந்தேன். வருங்காலத்தில் அது மாறுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தற்போது நடந்தவை அடிப்படையில் கே.எல் ராகுல் இந்தியாவுக்கு வெளியே தொடக்க வீரராக விளையாடத் தகுதியானவர்.

எனவே அந்த ஜோடியில் மாற்றத்தை நான் பார்க்க விரும்பவில்லை. வெளியே இருந்து பார்க்கும் போதும் அது மாற்ற வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. மிடில் ஆர்டரில் விளையாடுவது தனிப்பட்ட முறையில் அது எனக்கு எளிதல்ல. ஆனால் அணிக்கு அது நன்றாக இருக்கும்" என்று கூறினார்.

Read Entire Article