ஜெருசலேம்: அக். 7 தாக்குதலுக்கு பழி தீர்த்துக் கொண்டதாகவும் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பிணையக்கைதிகளை ஒப்படைத்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். மேலும், காசாவில் இருந்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஏவியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இஸ்ரேலில் 1,200 பேர் பலியாகினர். மேலும் 250க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பிணைக்கைதியாக பிடித்துச் சென்றது. இதன் காரணமாக கடந்த ஓராண்டாக காசாவில் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்நிலையில், காசாவில் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ராணுவ வீர்கள் நேற்று முன்தினம் கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த ஹமாஸ் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில், 3 ஹமாஸ் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாராக இருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் யஹ்யா. இதையடுத்து தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் இயக்கத் தலைவர் சின்வா கொல்லப்பட்டதை உறுதி செய்தார். அவர், “யஹ்யா சின்வார் உயிரிழந்து விட்டார். ரஃபாவில் அவரை ஆற்றல் மிக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வீழ்த்தியுள்ளனர்.இது காசா மீதான போரின் முடிவு அல்ல, ஒரு முடிவின் ஆரம்பம். காஸா மக்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால், போர் நாளை கூட முடிவுக்கு வரலாம்.அதற்கு ஹமாஸ் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு, பணயக்கைதிகளை ஒப்படைக்க வேண்டும். இஸ்ரேல் உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த 101 பேரை ஹமாஸ் சிறைப் பிடித்து காஸாவில் வைத்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார். ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்ட நாள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் உலகத்திற்கும் நல்ல நாள் என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் விமர்சனம் செய்துள்ளார்.
The post அக். 7 தாக்குதலுக்கு பழி தீர்த்துக் கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பேச்சு.. போர் எப்போது முடிவுக்கு வரும் எனவும் பதில் appeared first on Dinakaran.