
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் கடந்த 20-ந் தேதி மாலை 6.15 மணியளவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அங்கு குழாயில் குடிநீர் பிடித்துக்கொண்டு இருந்த 6 வயது சிறுமி ரோஷினிகுமாரியை அவளது தாய் கண் முன்னே கவ்விச்சென்றது.
வனப்பகுதிக்குள் இழுத்துச்சென்று அவளை கடித்துக்கொன்று, உடலின் பாதி பாகத்தை தின்றுவிட்டு மீதமுள்ள பாகத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றது. இதற்கிடையில் சிறுமியின் தாய் கொடுத்த தகவலின்பேரில் வால்பாறை வனச்சரகர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் வனத்துறையினர், பச்சைமலை எஸ்டேட் தோட்ட தொழிலாளர்கள் விடிய, விடிய சிறுமியை தேடி அலைந்தனர்.
மோப்ப நாய் உதவியுடன் பல மணி நேரம் நடந்த தேடுதலுக்கு பிறகு மறுநாள் காலை 11.30 மணியளவில் குடியிருப்பு பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுமியை வனத்துறையினர் பிணமாக மீட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால், அந்த ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதை ஏற்று சிறுத்தையை பிடிக்க சிறுமியின் உடல் கிடந்த இடத்தின் அருகில் 22-ந் தேதி வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
மேலும் கேமராக்களும் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. ஆனால் சிறுத்தை நடமாட்டம் பதிவாகவில்லை. அதன்பிறகு சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்ற இடத்துக்கு அருகில் உள்ள தேயிலை தோட்ட பகுதியில் மற்றொரு கூண்டு வைக்கப்பட்டது. அங்கும் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. அங்கு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் அந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதை கண்ட வனத்துறையினர், ஆனைமலை புலிகள் காப்பக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி வனப்பாதுகாவலர் பிரியதர்ஷினி தலைமையில் வால்பாறை வனச்சரகர் சுரேஷ் கிருஷ்ணா, வனத்துறையின் கால்நடை மருத்துவ அதிகாரி விஜயராகவன் விரைந்து வந்தனர்.பின்னர் சிறுத்தை இருந்த கூண்டை லாரியில் ஏற்றி டாப்சிலிப் வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
பின்னர் உலாந்தி வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டது. சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியதால் பச்சைமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.