ஆக்லாந்து,
இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதன் முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 113 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 66 ரன்களும், குசல் மென்டிஸ் 54 ரன்களும், ஜனித் லியானகே 53 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேன் ஹென்ரி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 291 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் மார்க் சாப்மேன் தவிர மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை.
வெறும் 29.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூசிலாந்து 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 81 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்துவீசிய இலங்கை தரப்பில் தீக்ஷனா, அசிதா பெர்னண்டோ மற்றும் எஷன் மலிங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன் மூலம் நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அசிதா பெர்னண்டோ ஆட்ட நாயகனாகவும், மேட் ஹென்ரி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.