ஜெருசலேம்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் உட்பட 3 பேருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்த முடிவானது யூதர்களுக்கு எதிரானது என்று நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் – ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடைபெற்று வருகிறது. இவ்விசயத்தில் இஸ்ரேல் ராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) நேற்று பிறப்பித்த கைது வாரன்ட் உத்தரவில், ‘போர் குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெயிஃப் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது.
இவர்கள் மீது மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் சுமத்தப்படுகிறது. இவர்கள் மீது பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை வேண்டுமென்றே வழிநடத்தியது. காசா மக்கள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத பொருள் சப்ளை செய்ததை தடுத்தது போன்ற குற்றங்கள் சுமத்தப்படுகிறது. ஏற்கனவே கடந்த மே மாதத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் ராணுவ தளபதி டெய்ஃப் மற்றும் மூத்த ஹமாஸ் தலைவர்களான இஸ்மாயில் ஹனியே மற்றும் யாஹ்யா சின்வார் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்திருந்தது. இருப்பினும், ஹனியே மற்றும் சின்வார் ஆகியோர் கொல்லப்பட்டதால் அவர்களுக்கு எதிரான கைது வாரன்டை நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரன்ட் குறித்து இஸ்ரேல் பிரதமர் அளித்த பதிலில், ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவானது யூதர்களுக்கு விரோதமானது. யூத விரோத தீர்ப்பு; நவீன டிரேஃபஸ் விசாரணை போன்றது. பிரான்ஸ் நீதிபதி தலைமையிலான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீண்டும் ஒரு தவறைச் செய்துவிட்டது. நீதிமன்றம் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. சாமானியக் குடிமக்கள் எந்தப் பிரச்னையையும் சந்திக்காமல் இருக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம்’ என்றார்.
கடந்த 1894ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தில் பணியாற்றிய யூத ராணுவ அதிகாரிக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராக பிரான்ஸ் ராணுவ ரகசிய ஆவணங்களை கசியவிட்டதாக புகார் எழுந்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் நிரபராதி எனக் கண்டறியப்பட்டு, மீண்டும் பிரான்ஸ் நாட்டின் ராணுவ அதிகாரியானார். அதனைதான் நெதன்யாகு, நவீன டிரேஃபஸ் விசாரணை குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் மக்கள் 5 லட்சம் பேர் சிரியாவில் தஞ்சம்
ஐநா அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேல் – லெபனான் இடையிலான போரில் கிட்டத்தட்ட 8,80,000க்கும் அதிகமான மக்கள் தங்களது நாட்டிற்குள் இடம்பெயர்ந்துள்ளனர்; அவர்களில் 20,000க்கும் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட 5,00,000க்கும் மேற்பட்ட மக்கள் லெபனானில் இருந்து சிரியாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இவ்வாறு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதை தடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவை லெபனானில் உணவுப் பாதுகாப்பு மோசமடையும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் முதல் இஸ்ரேல் – ெலபனான் இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் மோதல்களால், உணவு விநியோகச் சங்கிலி கடுமையாக சீர்குலைத்துள்ளன. தற்போது 12 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவு சப்ளை செய்ய முடியவில்லை என்றும், லெபனான் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் ஏற்கனவே உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. சவாலான சூழலிலும் இந்த ஆண்டு செப்டம்பர் முதல், தெற்கு மற்றும் பால்பெக்-ஹெர்மல் கவர்னரேட்டுகளில் 65,000க்கும் அதிகமான மக்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
The post 3 பேருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சர்வதேச கோர்ட்டின் முடிவு யூதர்களுக்கு விரோதமானது: இஸ்ரேல் பிரதமர் கண்டனம் appeared first on Dinakaran.