3 ஆண்டுகளாக டேட்டிங்; தற்கொலை ஒப்பந்தம்... காதலியை சுட்டு கொன்ற பின்பு மனம் மாறிய காதலன்

2 days ago 1

போபால்,

மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் பகுதியை சேர்ந்த காதல் ஜோடி சச்சின் யாதவ், மீரா. இவர்களில் மீரா (வயது 24) பட்ட மேற்படிப்பு முடித்து விட்டு, பி.எட் படித்து வந்திருக்கிறார். இவர்கள் 2 பேரும் 3 ஆண்டுகளாக வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர்.

சமீபத்தில் இந்த விவரம் அறிந்ததும், இரு வீட்டு குடும்பத்தினரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மீராவின் குடும்பத்தினர் அவருக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இதனால், காதல் ஜோடி நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், இருவரும் தற்கொலை ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதன்படி, மீராவை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, சச்சினும் தற்கொலை செய்வது என முடிவாகி உள்ளது. இதன்படி நேற்று மதியம் இருவரும் சாட்டை சாலையில் உள்ள சச்சினின் வாடகை வீட்டில் சந்தித்துள்ளனர்.

அப்போது, காதலி மீராவை சுட்டு கொன்ற பின்னர், சச்சின் மனம் மாறியுள்ளார். தற்கொலை செய்யும் முடிவை மாற்றிக்கொண்டார். மதியம் 1.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது, துப்பாக்கி சுடும் சத்தம் பேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

அவர்கள் அறையில், மீரா பலியாகி கிடந்த காட்சியை கண்டனர். சச்சின் கைத்துப்பாக்கியுடன் நின்றிருக்கிறார். அவர், சுற்றியிருந்தவர்களிடம் போலீசிடம் போக போகிறேன் என கூறியிருக்கிறார். ஆனால், கூறியபடி அதனையும் அவர் செய்யவில்லை. சம்பவ பகுதியில் இருந்து தப்பியோட முயன்றிருக்கிறார். அவரை நவ்காவன் பகுதியில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதுபற்றி மூத்த போலீஸ் சூப்பிரெண்டு அகம் ஜெயின், கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் சிங், மற்றொரு அதிகாரி அமன் மிஷ்ரா உள்ளிட்டோர் சம்பவ பகுதியை ஆய்வு செய்தனர். தடய அறிவியல் குழுவும் வந்து சேர்ந்தது.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் சூப்பிரெண்டு ஜெயின் கூறும்போது, ஒன்றாக இறப்போம் என அவர்கள் 2 பேரும் திட்டமிட்டு உள்ளனர். இதன்படி, மீராவின் தலையில் சச்சின் சுட்டுள்ளார். பின்னர் தப்பி விட்டார். எனினும், இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் உள்நோக்கம் ஆகியவை பற்றி விசாரித்து வருகிறோம். சச்சினை காவலில் எடுத்துள்ளோம்.

அவர் கூறிய விசயங்களை ஆராய்ந்து வருகிறோம் என கூறியுள்ளார். உண்மையில் இருவரும் தற்கொலை முடிவை எடுத்தனரா? அல்லது மீராவுக்கு திருமண ஏற்பாடு என தெரிந்ததும், வீட்டுக்கு வரவழைத்து அவரை சச்சின் சுட்டு கொன்று விட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article