சென்னை,
சென்னை கொரட்டூரில், ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று விளையாடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய அவர் கூறியதாவது:-
தமிழக பேட்மிட்டன் சங்க தலைவராக 7 ஆண்டுகள் இருக்கிறேன். நான் வருவதற்கு முன்பு சிபாரிசு மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நான் வந்த பிறகு திறமையின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வெளிப்படையாக வீரர்களின் திறமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் இன்று சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தமிழக வீரர்கள் உள்ளனர்.
57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. ஆனாலும் சென்னையின் நிலைமை மாறவில்லை. தமிழ்நாட்டில் 2026-ல் அமையும் கூட்டணி ஆட்சியில் பா.ம.க.வும் இருக்கும்.
அரசு மருத்துவர்கள் ஆனாலும் சரி தனியார் மருத்துவர்கள் ஆனாலும் சரி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மருத்துவர்களின் சேவை மக்களை காப்பதுதான். சிகிச்சை கொடுக்காமல் மருத்துவர்கள் மெத்தனமாக இருக்க மாட்டார்கள். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் எல்லா மருத்துவர்களும் நினைப்பார்கள். அரசு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்பது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.