200 தொகுதிகளில் வெற்றி: ஸ்டாலின் பேச்சை அ.தி.மு.க. நிறைவேற்றும் - முன்னாள் அமைச்சர் தங்கமணி

2 hours ago 1

மதுரை,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி, "தி.மு.க ஆட்சியில் அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டார்கள். இந்த ஆட்சியில் வரிக்கு மேல் வரி போடப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. மக்களை வருந்துகிற அரசாக இருக்கக் கூடாது. அ.தி.மு.க ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி வருகிறது. எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால், மகளிருக்கு கொடுக்கப்படும் ரூ.1000 அவர்களுக்கு வந்திருக்காது.

ஜெயலலிதா, தனது அ.தி.மு.க ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார். ஆனால், தி.மு.க. அரசு எதையும் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. திட்டம் என்பதால் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. அரசு மறுத்து வருகிறது.

நகை கடன் தள்ளுபடி என்று கூறினார்கள் ஆனால் 35 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்குதான் தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் 52 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள்" என்று அவர் கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "200 தொகுதிகளின் வெற்றி என்ற முதல்-அமைச்சரின் பேச்சை செயல்படுத்தப்போவது அ.தி.மு.க. தான். வரும் தேர்தலில் அ.தி.மு.க. 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு 6 சதவீத வாக்குகள் குறைந்தது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆறு சதவீதம் குறையும் அந்த 12 சதவீதம் எங்களுக்கு வரும்.

அ.தி,மு.க.வில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் முடிவெடுப்பார். மக்களின் முக மலர்ச்சியே இந்த ஆட்சிக்கு சாட்சி என முதல்-அமைச்சர் கூறியுள்ளார். பின் எதற்காக ஆறு சதவீத வாக்கு குறைந்தது. எடப்பாடியாரின் அரசுதான் மக்களுக்கான அரசு" என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். 

Read Entire Article