10 நாட்களாக பணி வழங்காததால் மாநகர பேருந்தை வேகமாக இயக்கி காவல் நிலையம் மீது மோதி விபத்து: மெக்கானிக் கைது

3 days ago 2

வேளச்சேரி: ஒழுங்கீனம் காரணமாக கடந்த 10 நாட்களாக பணி வழங்காத ஆத்திரத்தில், டிப்போவில் இருந்த மாநகர பேருந்தை வேகமாக இயக்கி, காவல் நிலையம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பணிமனையில் இருந்து, நேற்று அதிகாலை அதிவேகமாக வெளியில் வந்த பேருந்து, எதிரே உள்ள காவல் நிலைய மதில்சுவரில் மோதி நின்றது. இதில், அங்கு மதில் சுவர் உடைந்து, அருகில் நிறுத்தியிருந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

சத்தம் கேட்டு ஓடிவந்த போலீசார், பேருந்தை இயக்கிய நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், அடையாறு மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்யும் குணசேகரன் (50) என்பது தெரிந்தது. ஒழுங்கீனம் காரணமாக, கடந்த 10 நாட்களுக்கு மேலாக இவருக்கு வேலை தரப்படவில்லை. இந்நிலையில், நேற்று அதிகாலை, மது போதையில் பணிமனைக்கு வந்த குணசேகரன், அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், பணிமனைக்குள் சென்று, அங்கு நின்றிருந்த மாநகர பேருந்தை வேகமாக வெளியே எடுத்து, எதிரே உள்ள அடையாறு காவல் நிலைய மதில்சுவரில் மோதியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பணிமனையின் இளநிலை பொறியாளர் கிளமென்ட் அளித்த புகாரின்பேரில், அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மெக்கானிக் குணசேகரனை கைது செய்தனர். இந்த வழக்கு அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அத்துமீறி மாநகர போக்குவரத்து பணிமனைக்குள் நுழைந்து, சட்டவிரோதமாக மாநகர பேருந்தை அதிவேகமாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய மெக்கானிக் குணசேகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post 10 நாட்களாக பணி வழங்காததால் மாநகர பேருந்தை வேகமாக இயக்கி காவல் நிலையம் மீது மோதி விபத்து: மெக்கானிக் கைது appeared first on Dinakaran.

Read Entire Article