ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து வந்து மம்சாபுரத்தில் மாறி, மாறி முகாமிடும் ஒற்றை யானை: 25 நாட்களாக காட்டுது கண்ணாமூச்சி

1 week ago 7

* விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து இறங்கி வரும் காட்டுயானை மம்சாபுரம் ஊர்ப்பகுதியில் அடிக்கடி முகாமிடுகின்றது. இதனை தடுக்க அகழி தோண்டியும், தீ வைத்தும் வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காட்டுயானைகள் அதிகளவில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளில் சில மாலை நேரங்களில் மலைப்பகுதியை விட்டு கீழே இறங்கி வருகின்றன. இதில், ஒரு யானை மட்டும் 3 கி.மீ தூரமுள்ள சாலையைக் கடந்து மம்சாபுரம் ஊருக்கு அருகே வந்து அடிக்கடி முகாமிடுகிறது.

சில தினங்களுக்கு முன் மம்சாபுரம் பகுதியில் உள்ள வேப்பங்குளம் கண்மாய்க்கு யானை வந்துவிட்டது. இதை விவசாயிகள் பார்த்தவுடன் அருகில் இருந்த கரும்பு தோட்டத்துக்குள் அது புகுந்து விட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சுமார் 3 மணிநேரம் போராடி யானையை வனப்பகுதிக்கு விரட்டினர். பெரும்பாலும் மாலை நேரங்களில் மலைப்பகுதியை விட்டு கீழே இறங்கி ஊர்ப்பகுதிக்கு வரும் யானை அதிகாலையில் மீண்டும் மலைப்பகுதிக்கு சென்றுவிடும். ஆனால், நேற்று ஊருக்குள் வந்த யானை காலை 9 மணியளவில் தான் சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த டிரோன் மூலம் கண்காணித்து விரட்டுகின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் ஒலி எழுப்பியும், தீ மூட்டியும் விரட்டுகின்றனர். வனத்துறை துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின்பேரில், வனத்துறை ரேஞ்சர் செல்லமணி தலைமையில், கடந்த 25 நாட்களாக ஊருக்குள் வரும் ஒற்றை யானையும், விளைநிலங்களுக்கு வரும் யானைகளையும் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ட்ரோன் மூலம் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறும் பகுதியைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் அகழிகளை தோண்டி தடுத்து வருகின்றனர். ஒற்றை யானை அடிக்கடி ஊர்ப்பகுதிக்கு வருவதால், மம்சாபுரம் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வழிகளை கண்டறிந்து, அடிவாரத்தில் முக்கியப் பாதைகளில் 6 அடி ஆழத்திலும் 3 அடி அகலத்திலும் அகழி அமைக்கும் பணி நடந்து வருகிறது. 5 இடங்களில் இருந்து யானைகள் வெளியேறி வருகின்றன. அந்த இடங்களில் அகழி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. இது தவிர யானைகள் வரும் வழிகளில் தீ வைத்தும் தடுத்து வருகிறோம்’ என்றார். இதனிடையே, வில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் கரும்பு காட்டுக்குள் யானை புகுந்து, பின்னர் சாலையைக் கடந்து வனப்பகுதிக்கு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து வந்து மம்சாபுரத்தில் மாறி, மாறி முகாமிடும் ஒற்றை யானை: 25 நாட்களாக காட்டுது கண்ணாமூச்சி appeared first on Dinakaran.

Read Entire Article