வேண்டியவர்களை மட்டும் கூட்டிவந்து கள ஆய்வை நடத்திய மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 hours ago 1

‘‘பருவ மழை சீசன் மாதிரி ஆர்டிஓ, ஆபீசர்கள் காட்டில் பண மழை கொட்டுகிறதாமே தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாடு முழுவதும் ஆர்டிஓக்கள் காட்டில் பண மழை பொழியுதாம்.. பதவி உயர்வு, பணியிட மாற்றம் என களம் இறங்கி அதிகாரிங்க கல்லா கட்றாங்களாம்.. சமீபத்தில போக்குவரத்து கமிஷனர், இணை கமிஷனருக்கு பெரிய அளவில் கவனிப்பு நடந்து இருக்குது.. இதனால ஆர்டிஓ அலுவலகங்களில் பி.ஏ.,வாக 4 வருஷம் பணி முடிச்ச பலரை, இடமாற்றம்ங்கிற பெயர்ல வெளியூர்களுக்கு தூக்கி அடிக்கிறாங்களாம்..

இடமாற்றத்துல காலியாகிற இடங்களுக்கு வேறு அலுவலகத்தில் பணியாற்றி வரும் பி.ஏ.,க்களை நியமிக்க போறாங்களாம்.. இதற்காக ரூ.10 லட்சம் வரைக்கும் பணம் விளையாடுதாம்.. ஓசூர், மதுரை, கோவை போன்ற அதிகம் சம்பாதிக்கிற மாவட்டத்துல பி.ஏ பணியிடம் வாங்க போட்டிப்போட்டு பணத்தை வாரி கொடுத்துட்டு இருக்காங்களாம்.. இதனால அதிகாரிகள் காட்டில் பண மழை பொழியுது.. பணம் இல்லாத காரணத்தால சில ஊழியர்கள் சொந்த மாவட்டத்துல கூட பணியிடம் வாங்க முடியாம புலம்புறதும் கேட்குது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் சைலன்டாக நடந்த இலைக்கட்சி கள ஆய்வு கூட்டத்தால் அதிருப்தியில் இருக்காங்களாமே தொண்டர்கள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி களஆய்வு கூட்டங்களில் மோதல், அடிதடி சம்பவங்கள் அரங்கேறிதால் கள ஆய்வு கூட்டத்திற்கு குறிப்பிட்ட நபர்கள்தான் வர வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் கட்சியினருக்கு விதிக்கப்பட்டதாம்… ஆனால் மலைக்கோட்டை, நெற்களஞ்சியம், தூங்கா நகரங்களில் நடந்த களஆய்வு கூட்டத்திலும் லோக்கல் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் மோதல் சம்பவம் அரங்கேறியதால் அவர்கள் கடும் அப்செட்டுக்குள்ளானார்களாம்…

இந்த மாவட்டங்களில் நடந்த மோதல் சம்பவங்கள் போல் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் நடந்து விடக்கூடாது என்பதற்காக அந்த மாவட்டத்தில் சைலன்டாக கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்ட லோக்கல் மாஜியானவர் தீவிரமாக இருந்தாராம்… இதில் பெயரளவுக்கு கூட்டம் நடத்தினால் போதும் என்று கள ஆய்வு குழுவினரிடம் தெரிவித்து இருந்தாராம்… ஒரு வாரத்துக்கு முன் நடந்த இந்த ஆய்வு கூட்டத்தின் போது லோக்கல் மாஜியானவர் தனக்கு வேண்டிய விசுவாசிகளை மட்டும் அழைத்து ‘சிம்பிளாக’ வெளியே தெரியாமல் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இந்த தகவல் தற்போது வெளியில் கசிந்ததால் மாஜியானவர் மீது 2வது கட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆற்றுல லாரிய ஓட்டுகிற பஞ்சாயத்துல ஒரு சிங்கிளுக்கு இவ்வளவு கொடுக்கணும்னு ரொம்பவே ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாராமே ஸ்டேஷன் காக்கி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல செய் என்று தொடங்கி ஆறுல முடியுற தொகுதியில ஆறு ஓடுறதால, அங்க மணலுக்கு பஞ்சம் இல்லை.

இதனால அந்த தொகுதிக்கு வர்ற காக்கிகளும், ரெவின்யூ பிரிவு ஆபீசர்களும் போட்டிப்போட்டு பணி செய்ய வருவாங்க.. செய்யுனு தொடங்குற சப்டிவிஷன்ல, படைக்கும் கடவுள் பெயர் கொண்ட லிமிட்ல தமிழ்கடவுள் பெயர் கொண்டவரு புதுசா பொறுப்பேற்றாரு.. அவர் பார்வையினால, பண ஆறாக ஓடுதாம்.. கொஞ்ச நாளுக்கு முன்னாடி மணல் மாபியாக்களுக்கிடையே யார் மணல் அள்ளுறதுன்னு தகராறு நடந்திருக்குது.. வழக்கமாக மணல் அள்ளுறவங்களுக்கு பதில் வேற ஒருத்தர் மணல் அள்ளிட்டாராம்..

இதனால அந்த லாரியை பறிமுதல் செய்யணும், இல்லன்னா, மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் சொல்லிடுவேன்னு இன்னொரு மணல் மாபியா காக்கிகளையே மிரட்டியிருக்காங்க.. ஸ்டேஷனுக்கு வந்த மணல் லாரிய 3 நாளாக வைத்திருந்து வழக்கு எதுவும் பதிவு செய்யவும் இல்லையாம்.. பஞ்சாயத்து நடத்தி ஒரு வழியாக மணலோட அந்த லாரிய விடுவிச்சாங்களாம்.. அப்போது ஸ்டேஷன் காக்கி ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாராம்.. ஆற்றுல யார் இன்னைக்கு மணல் ஓட்டணுமோ அவங்க மட்டும்தான் ஓட்ட வேண்டும்..

அவங்களுக்கு ஒதுக்குன தினத்துலதான் மணல் ஓட்டணும். தேவையில்லாம சண்டை போட்டு எங்களையும் டென்ஷன் ஆக்காதீங்கன்னு பஞ்சாயத்து முடிச்சு வெச்சாராம்.. ஒருமுறை லாரி ஆற்றுல இறங்குன ஒரு சிங்கிளுக்கு 5கே ஸ்டேஷனுக்கு கொடுக்கணும்.. தேவையில்லாம உங்க இஷ்டத்துக்கு லாரியை ஆற்றுல இறக்க கூடாதுன்னு ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாராம்.. இந்த விவகாரம்தான் இப்போ அந்த பகுதியில ஹாட் டாப்பிக்கா போயிட்டிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போதைப்பொருள்பற்றி தகவல் கொடுப்பதை காக்கிகளே போட்டுக் கொடுப்பதால் இன்பார்மர்கள் கலக்கத்தில் இருக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் இன்பார்மர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.. அந்த மாவட்டத்தை போதைப்பொருள் விற்பனை இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட மற்றும் காவல்துறை தலைமை அதிகாரிகள் கடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களாம்..

அவர்களே பள்ளி, கல்லூரிக்கு நேரடியாக போய் இதற்காக பல்வேறு குழுக்கள் அமைத்து இருப்பதுடன், தகவல் கொடுக்க செல்போன் நம்பர்களையும் அறிவிச்சி இருக்காங்களாம்.. ஆனால் சில காவல் நிலையங்களில் உள்ள காக்கிகள் சிலர் கருப்பு ஆடுகளாக மாறி விட்டார்களாம்.. தகவல் எங்கிருந்து போகுது.. தகவல் கொடுத்தவர் யார் என்பதை போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு புட்டுபுட்டு வைக்கிறார்களாம்..

சமீபத்தில் நடந்த மீனவர் குறைதீர் கூட்டத்தில் கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவ சமுதாய மக்கள், இதை கூறி ரொம்பவே வருத்தப்பட்டார்களாம்.. வீட்டுக்கு கும்பல் கும்பலாக வந்து மிரட்டிட்டு போறாங்க.. இப்படி இருந்தா எப்படி நாங்க தகவல் கொடுக்க முடியும்னு வேதனையுடன் கூறினார்களாம்.. இதை கேட்ட மாவட்ட தலைமை அதிகாரி ரொம்பவே அப்செட் ஆயிட்டாராம்.. நீங்க பயப்படாதீங்க.. அப்படியெல்லாம் ஒன்னும் நடக்க விட மாட்டோம் என ஆறுதல் கூறியதுடன், இதுபற்றி விசாரிங்கன்னு குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்த காக்கி அதிகாரியிடம் கூறினாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post வேண்டியவர்களை மட்டும் கூட்டிவந்து கள ஆய்வை நடத்திய மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article