வெள்ளியங்கிரி மலையேறிய 15 வயது பள்ளிச் சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

19 hours ago 3

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய 15 வயது பள்ளிச் சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்கள் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் “வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது. இம்மலைக் கோவிலுக்கு செல்ல, ஏழு மலைகளை கடந்து நடந்தே செல்ல வேண்டும். மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில், நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர். அதில் விஸ்வா என்ற 15 வயது சிறுவன், தனது தந்தை மற்றும் உறுவினர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தபோது மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக டோலி கட்டி சிறுவன் அடிவாரத்துக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மலையேறும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் மலையின் அடிவாரம் மற்றும் முதலாவது மலையில் சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமில் இதய நோய் உள்ளிட்ட உடல் பிரச்னைகள் உள்ள பக்தா்கள் தங்கள் உடல் நிலையைப் பரிசோதனை செய்துவிட்டு மலையேறுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post வெள்ளியங்கிரி மலையேறிய 15 வயது பள்ளிச் சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article