வியட்நாம் தலைநகர் ஹனோயில் கரையை கடந்தது யாகி புயல்; பலியானவர்கள் எண்ணிக்கை 64-ஆக உயர்வு

1 week ago 14

ஹனோய்: பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை தாக்கியுள்ளது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் தாக்கியது. மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீச தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. புயலை தொடர்ந்து அங்கு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்பட கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை நீரில் தத்தளித்து வருகின்றன.புயல் காரணமாக அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு பிடுங்கி தூக்கி வீசப்பட்டன. இதனால் அங்கு மின்சாரம், குடிநீர், இணைய சேவை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தடைப்பட்டது. மேலும் அங்குள்ள சாங் போ நகரில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

இதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தநிலையில் அங்குள்ள மலைபாங்கான காவ் பாங் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனிடையே அங்கே ஆற்றின் குறுங்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் ஒன்று இரண்டு தூண்டுகளாக உடைந்து ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது. அப்போது அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பேருந்தில் பயணித்த 20 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்த மீட்புத்துறையினர் பேருந்தில் பயணித்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் வியட்நாமில் புயல் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 64-ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

The post வியட்நாம் தலைநகர் ஹனோயில் கரையை கடந்தது யாகி புயல்; பலியானவர்கள் எண்ணிக்கை 64-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article