விஜயநகர காலத்து கல்வெட்டு, நடுகல் கண்டெடுப்பு திருவண்ணாமலை மலை படம் பொறித்த காட்சிகளால் வியப்பு கலசபாக்கம் அருகே தென்மாதிமங்கலம் கிராமத்தில்

1 hour ago 4

திருவண்ணாமலை, செப்.26: கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம், தேவராயன்பாளையம், சீனந்தல் ஆகிய கிராமங்களில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் கண்டறிப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் பழமை வாய்ந்த நடுகற்கள் இருப்பதாக கேட்டவரம்பாளையம் கிராமத்தை சேர்ந்து தொல்லியல் ஆர்வலர் ஜெ.சிவா அளித்த தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் மற்றும் சி.பழனிசாமி, விநாயகம், மு.ராஜா ஆகியோர் நேரடி ஆய்வு செய்தனர். அதன்படி, தென்மாதிமங்கலம் கிராமத்தில் பர்வதமலை கிரிவலப்பாதையில் உள்ள பலகைக்கல்லில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் தெரிவித்ததாவது: தென்மாதிமங்கலம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் சூரியன், சந்திரன், திருவண்ணாமலை மலையின் படம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் நிலதானம் மற்றும் வரிகள் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கார்த்திகை, சித்திரை நவரை காலங்களில் செய்யும் பயிருக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கல்வெட்டில் நல்லெருது, காணிக்கை உள்ளிட்ட பல்வேறு வரிவிதித்தது குறித்தும் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவராயன் பாளையம் அருகே உள்ள பெருமாள் பாளையத்தில் உள்ள பலகைக் கல்வெட்டில் கடந்த கி.பி.1,587ம் ஆண்டு தேவராயன் பாளையத்தில் நிலதானம் செய்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டிலும், திருவண்ணாமலை மலையைக் குறிக்க முக்கோணம் போன்ற குறியீடு வெட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் அடுத்தடுத்து, திருவண்ணாமலை மலையைக் குறிக்கும் கல்வெட்டுகள் தொடர்ந்து கிடைத்தபடி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருவண்ணாமலை நகரம் வரலாற்றுக் காலத்தில் சக்திவாய்ந்த மையமாக இருந்ததை இந்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. தேவராயன்பாளையம் அடுத்த பெருமாள் பாளையத்தில், பூமியில் புதையுண்டிருந்த நடுகல்லும், சீனந்தல் மற்றும் வேளாநந்தல் கிராமத்தில் அழிவின் நிலையில் இருந்த நடுகல்லும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்டு எடுக்கப்பட்டு, அதே இடத்தில் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன. இதுவரை 6 நடுகற்களையும், 2 கல்வெட்டுகளையும் இப்பகுதியில் அழிவின் விளிம்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வு நடுவம் மேற்கொண்ட இப்பணியில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, விஜய், தர், விவசாயி சுப்ரமணி, சிவகுமார், லெனின், பழனிமுருகன், குமரேசன், ராம்குமார், கோபிராஜ் ஆகியோர்களும் ஈடுபட்டனர். தொடர்ந்து கலசபாக்கம் பகுதியில் நடுகற்கள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் ஆவணப்படுத்தும் பணி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப் பகுதிகளில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை மீட்டெடுக்கவும் ஆவணப்படுத்தவும் தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post விஜயநகர காலத்து கல்வெட்டு, நடுகல் கண்டெடுப்பு திருவண்ணாமலை மலை படம் பொறித்த காட்சிகளால் வியப்பு கலசபாக்கம் அருகே தென்மாதிமங்கலம் கிராமத்தில் appeared first on Dinakaran.

Read Entire Article