பள்ளிக்கூடம் செல்வது என்பது வெறும் பாடங்களைப் படிப்பதற்கு என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். பெற்றோர்களும் அப்படி நினைப்பதுதான் ஆச்சரியம். பாடங்களைப் படித்து மனப்பாடம் செய்து பரீட்சையில் கேள்வி – பதில் எழுதுவது மட்டுமே படிப்பு இல்லை. அப்படிப் பாடங்களைப் படித்து கேள்வி – பதிலை மனப்பாடம் செய்து பரீட்சை எழுதுவதுதான் படிப்பு என்றால், அதை வீட்டில் இருந்தே செய்து விடலாம். அதற்குப் பள்ளிக்கூடம் என்ற ஒரு அமைப்பே தேவைப்படாது. ஆனால், பள்ளியில் மாணவர்கள் பாடங்களைத் தாண்டி முழுமையான வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிறார்கள். பள்ளிக்குப் போகும் வழியிலும் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியிலும்கூட நிறைய அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். பாடங்களைத் தாண்டி மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பள்ளி வளாகத்திலும் வகுப்பறையிலும் நிறையவே இருக்கின்றன. இது பெரும்பாலும் தெரிந்ததுதான் என்றாலும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் மாணவர்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கக்கூடிய தடைகளும் சமூக இடர்பாடுகளும் பள்ளியில் அவர்களை எதுவுமே கற்றுக்கொள்ள முடியாமல் செய்கிறது. அந்த இடர்பாடுகளை புறம்தள்ளிவிட்டு மாணவர்கள் வாழ்க்கையை பள்ளி வளாகத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கே இந்தக் கட்டுரை.
பள்ளித் தோட்டம்
பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைப்பது என்பது ஒரு சிறந்த கலை. விதையைத் தேர்வு செய்வது தேவையான உரங்கள் இடுவது, அளவாகத் தண்ணீர் விடுவது, களைச்செடிகளை அகற்றுவது போன்றவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இது விவசாயத்தை மேற்படிப்பாக எடுத்துப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மற்ற மாணவர்களும் கூட பின் நாட்களில் தங்கள் வீடுகளில் தோட்டம் அமைத்து பராமரிக்க இந்தக் கற்றல் உதவும். இதற்காக அவர்கள் பள்ளி வளாகத்தில் ஒரு பகுதியைச் சுத்தம் செய்து மண்வெட்டி கொண்டு வெட்டி புற்களை அகற்றி, சேற்றுமண்ணில் விதைகள் விதைக்க வேண்டும். மாணவர்களுக்கு இப்படி ஒரு பயிற்சியைப் பள்ளி வளாகங்களில் வழங்கும்போது மாணவர்களை இப்படிச் சேற்று மணலில் வேலை வாங்குவதா? என்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி அது ஏதோ சமூகக் குற்றத்தை செய்தது போலச் செய்தி பரப்புகிறார்கள். இந்த சிக்கலை தவிர்ப்பதற்காகப் பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களே மாணவர்களைத் தவிர்த்து விட்டு பள்ளித் தோட்டம் அமைத்து விடுகிறார்கள். மாணவர்கள் தோட்டம் அமைக்கும் கலையைக் கற்கமுடியாமலே போய்விடுகிறது. இது ஒரு சமூகத்தடை. இது தவிர்க்கப்பட வேண்டும். பள்ளியில் தோட்டம் அமைக்க மாணவர்கள் பயன்படுத்தப்படும்போது அதனை பெற்றோர்களும் ஆதரிக்க வேண்டும். ஊடக சமூகமும் ஆதரிக்க வேண்டும்.
வகுப்பறை சுத்தம்
வீடாக இருந்தாலும் பள்ளியாக இருந்தாலும் தாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களைப் பழக்குவது மிகவும் அவசியமான ஒன்று. பல மாணவர்கள் வீடுகளில் ‘படிக்கிறேன் பேர்வழி’ என்று சொல்லிக்கொண்டு வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பெற்றோர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அவர்கள் துடைப்பத்தை எடுத்து வீடுகளை கூட்டுவது, ஒட்டடை அடிப்பது என்ற எந்த வேலையும் செய்வதில்லை. பள்ளிக்கூடத்திலும் வகுப்பறையை நான் ஏன் கூட்டிப் பெருக்க வேண்டும்? யாராவது செய்யட்டும் என்ற ஒரு மனநிலையில் இருக்கிறார்கள்.
பள்ளிகளில் வகுப்பறையை சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் இருந்தாலும் கூட வகுப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் மாணவர்களுக்கும் பங்கு உண்டு. பல பெற்றோர்கள் தாங்கள் படிக்கும்போது பள்ளி வகுப்பறையைத் தாங்களே கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைத்துக் கொண்டவர்கள்தான். அதுபோலக் கழிப்பறையைக் கூட சுத்தம் செய்து இருக்கிறோம். அது நம்முடைய கடமை. நாம் வசிக்கும் இடத்தை நாம்தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நம்முடைய குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இன்று இதற்கும் இடர்பாடு இருக்கிறது. மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்தால் அதைப் படம் எடுத்து ஊடகங்களில் பரப்பி விடுகிறார்கள். அதனால் மாணவர்களை இதுபோன்ற சுத்தம் செய்யும் பணிகளில் பள்ளிகள் ஈடுபடுத்துவதில்லை. நாம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையே மாணவர்கள் மறந்து விடுகிறார்கள். வகுப்பறையைச் சுத்தம் செய்வது ஒன்றும் குற்றமில்லை. அவர்களை அனுமதிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். (கழிப்பறையை சுத்தம் செய்வதில் மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்)
விருந்தினர்களை உபசரித்தல்
விருந்தோம்பல் என்பது நமது மண் சார்ந்த கலாசாரம். விருந்தினர்களை உபசரிப்பதும் அவர்களுக்குத் தேவையானதை செய்துகொடுப்பதும் நம்முடைய கடமை. இதையும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொள்ளப் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்களுக்குத் தண்ணீர் எடுத்து தருவது, ஆசிரியர்கள் திருத்த வேண்டிய பாடநோட்டுகளை ஆசிரியர்களின் மேஜையில் கொண்டு போய் வைப்பது, விழாக் காலங்களில் விருந்தினர்களுக்கு தேநீர் வழங்குவது போன்ற சிறுசிறு பணிவிடைகளை மாணவர்கள் செய்யலாம். பள்ளி விழாக்களின்போது வரும் விருந்தினர்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரிக்க வேண்டும். இவையெல்லாம் நல்ல பழக்கங்கள். பள்ளிகளில் மட்டுமே இவற்றைக் கற்றுக் கொள்ளமுடியும். அதே சமயம் ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை தங்களது தனிஅறைக்கு வரச் சொல்லி வேலை வாங்குவதையும், விருந்தினர்கள் தங்கி இருக்கும் அறைக்குச் சென்று உபசரிக்க சொல்வதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். எச்சரிக்கை.
பள்ளி வளாகத்தில் நட்பு
பள்ளி வளாகத்தில்தான் நட்பு மலர்கள் பூக்கின்றன. ஜாதி மதங்களற்ற ஒரு சமத்துவ சமூகம் கல்வி நிறுவனங்களில் தான் இருக்கின்றன. ஜாதி மதம் பாராமல் நல்ல நட்புகள் மாணவர்களிடையே உருவாகின்றன. இதற்கும் பல பெற்றோர்கள் தடை விதிக்கிறார்கள். நீ அந்த மாணவனோடு சேரக்கூடாது. யாரோடும் எந்த பேச்சும் வைத்துக் கொள்ளக்கூடாது. ‘நீ உண்டு உன் வேலை உண்டு’ என்று இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்து அனுப்புகிறார்கள். ‘நல்ல குணமுள்ள மாணவர்களோடு சேர வேண்டும்’ என்று அறிவுரை கூற வேண்டுமே தவிர யாருடனும் பேசக்கூடாது என்றோ, ஜாதி பார்த்து பேச வேண்டும் என்றோ சொல்லி அனுப்புவது மாணவர்களிடையே குறுகிய மனப்பான்மையை ஏற்படுத்திவிடும்.
கீழ்ப்படிதல்
கீழ்ப்படிதல் என்ற பழக்கத்தை மாணவர்கள் பள்ளிகளில்தான் கற்றுக்கொள்கின்றனர். ஆசிரியர்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவதும் அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்வதும் மாணவர்களின் கடமையாகும். சில சமயம் பள்ளியின் ஆசிரியர்களை விட பெற்றோர்கள் நிறைய படித்திருக்கலாம். அனுபவசாலிகளாகக்கூட இருக்கலாம். அப்போதும் கூட ஆசிரியர் சொல்லும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படக் குழந்தைகளை பெற்றோர்கள் பழக்க வேண்டும். உன் ஆசிரியரை நான் அதிகமாக படுத்தியிருக்கிறேன். நான் சொல்வதைக் கேள் என்று சொல்லும்பொழுது மாணவர்களின் கீழ்ப்படிதல் தன்மை மாறுகிறது. ஆசிரியரிடம் பாடத்தில் சந்தேகங்களை விவாதிக்க கற்றுக்கொடுங்கள் அதே சமயம் எதிர்த்துப் பேசச் சொல்லித் தராதீர்கள். நீங்கள் ஆசிரியரின் தவறை ச் சுட்டிக்காட்ட விரும்பினால் பள்ளிக்குச் சென்று தனிப்பட்ட முறையில் பேசுங்கள். இதுபோல இன்னும் நிறைய விஷயங்களுக்கு மாணவர்களுக்குத் தடை போடாதீர்கள்! அவர்கள் புத்தகப் பாடத்தை மட்டுமல்ல வாழ்க்கை பாடத்தையும் கற்றுக்கொள்ளட்டும். தடையாக இல்லாமல் தள்ளி நின்று வழிவிடுங்கள்!
The post வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வழிவிடுங்கள் appeared first on Dinakaran.