வாழப்பாடி: வாழப்பாடி பழனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பழனியாபுரத்தில் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தேனி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 600 காளைகள் பங்கேற்றன. இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து 400 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இவ்வீரர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இப்போட்டி தொடங்கியதும் முதலில் வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் அவர்களின் பிடியில் சிக்கியது. சில காளைகள் பிடியில் சிக்காமல் சென்றது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் வீரர்களின் பிடியில் சிக்காமல் தப்பிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பைக், மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், பீரோ, ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் முத்தமிழ் உள்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post வாழப்பாடியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 600 காளைகளுடன் 400 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.